தமிழ்நாடு

tamil nadu

உணவளிக்காமல் துன்புறுத்தல்... தனியார் பராமரிப்பு மையத்திலிருந்து 100 செல்லப்பிராணிகள் மீட்பு!

By

Published : Dec 20, 2022, 6:40 PM IST

சென்னை அருகே தனியார் செல்லப்பிராணிகள் பராமரிப்பு மையத்தில் உணவு அளிக்காமல் துன்புறுத்தப்பட்டு வந்த 100 செல்லப்பிராணிகளை விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் மீட்டனர்.

More
More

சென்னை: சென்னை அருகே உள்ள படப்பை எட்டியபுரம் பகுதியில் தனியார் செல்லப்பிராணிகள் பராமரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளை பராமரிக்க முடியாதவர்கள், அவற்றை இந்த மையத்தில் ஒப்படைத்து பராமரிப்பார்கள்.

அதற்காக மாதம்தோறும் பணம் செலுத்த வேண்டும். அதன்படி நாய்கள், பூனைகள் என சுமார் 100 செல்லப்பிராணிகள் இந்த மையத்தில் பராமரிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் பராமரிப்பு மையத்தில் உள்ளவர்கள், செல்லப்பிராணிகளை முறையாக பராமரிக்கவில்லை என்றும், செல்லப்பிராணிகளுக்கு சரிவர உணவு வழங்காமல், அடித்து துன்புறுத்தியதாகவும் புகார்கள் எழுந்தன. உரிமையாளர்கள் சிறிது நாட்களுக்குப் பிறகு தங்களது செல்லப்பிராணிகளை பார்க்க வந்தால், அவர்கள் பராமரிப்பு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டது.

இதுகுறித்து செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் விலங்குகள் நல வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் சோமங்கலம் போலீசார் உதவியுடன் விலங்குகள் நல வாரிய அதிகாரிகள், தனியார் பராமரிப்பு மையத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அனைத்து வளர்ப்புப் பிராணிகளும் உடல் மெலிந்து எலும்பும் தோலுமாக காணப்பட்டன. சில நாய்களின் கால்கள் உடைக்கப்பட்டு துன்புறுத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக செல்லப் பிராணிகளை மீட்டு மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சைக்குப் பிறகு தனியார் தொண்டு அமைப்புகள் மூலம் செல்லப்பிராணிகளை காப்பகங்களில் ஒப்படைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து விலங்குகள் வதை தடுப்புச்சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்மந்தப்பட்ட செல்லப்பிராணிகள் பராமரிப்பு மையத்தின் உரிமையாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 'ஆத்தீ.... எவ்வளவு பெரிசு' - வீட்டின் அலமாரியில் சென்று சீறிய நாகம்

ABOUT THE AUTHOR

...view details