சென்னை: சென்னை ரோட்டரி கிளப் (Chennai Rotary club) சார்பில் பள்ளியையும் அதை சார்ந்த சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைக்க மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் பள்ளியில் இன்று (ஆகஸ்ட் 16) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ராதாகிருஷ்ணன், "பெருநகர சென்னை மாநகராட்சியில் தினமும் 6 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை வருகிறது. அதை நாம் சுத்தப்படுத்தி கொண்டு இருக்கிறோம். ஆனால், அந்தந்த பகுதிகளில் தூய்மை என்பது குப்பைகளை அப்புறப்படுத்துவது மட்டுமின்றி அதை உறைப்பது, மறு சுழற்சி செய்வது, ஏற்கனவே தேங்கிய குப்பைகளை தரம் பிரிப்பது, பயோமைனிங் முறையில் அப்புறப்படுத்துவது போன்றவை அடங்கும்" என கூறினார்.
வீடுகளில் குப்பை சேகரிப்பு பணி குறித்து பேசிய அவர், 80 விழுக்காடு வரை வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரிப்பதாகவும், 60 விழுக்காடு நபர்கள் குப்பைகளை பிரித்து கொடுப்பதாகவும், பிரித்து தரப்படாத குப்பைகளை அந்த வளாகத்திற்குச் சென்று பிரித்து எடுப்பதாகவும் தெரிவித்தார்.
மாநகராட்சியின் 20 ஆயிரம் ஊழியர்கள்தான் பணியில் இருப்பதாகவும், மக்களே குப்பைகளை பிரித்து கொடுக்கலாம் என்று தெரிவித்தார். மேலும், வெளிநாடுகளில் அதை கண்டிப்பாக பின்பற்றுவதாகவும், நாமும் அதை கண்டிப்பை பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார். மேலும், நூறு கிலோவுக்கு மேல் குப்பை போடுபவர்களுக்கு கட்டணம் வசூலிப்பதாகவும் தெரிவித்தார்.