கால்வாயில் கொட்டப்பட்ட 2000 ஆவின் பால் பாக்கெட்டுகள் சென்னை:மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் சாலைகள், குடியிருப்புகள் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது. இதன் விளைவாக தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
வெள்ள பாதிப்பு காரணமாக, குடியிருப்புகளில் மழை நீர் சூழ்ந்ததால் தங்குவதற்கு இடம், உணவு, பால் பாக்கெட்டுகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர். இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சி, ஏரிக்கரை தெருவில், காலிமனையில் உள்ள கால்வாயில் 2,000க்கும் அதிகமான ஆவின் பால் பாக்கெட்டுகள் குவியலாக கொட்டப்பட்டுள்ளது. இது, அப்பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்டு சுமார் 5 நாட்கள் ஆனதால், ஏற்கனவே காலாவதியான பால் பாக்கெட்டுகள் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டது.
இந்த நிலையில், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குளக்கரைக்குப் பின்புறமாக கால்வாயில் ஆவின் பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்டது குறித்து தாம்பரம் மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. அதில், “ஆவின் நிறுவனம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், சில்லறை விற்பனையாளர்கள், பால் டிப்போக்கள் மற்றும் மொத்த விற்பனையார்கள் மூலமாக, சுமார் 15 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 4ஆம் தேதியன்று மிக்ஜாம் புயல் காரணமாக, அதிக அளவில் மழை பொழிந்ததால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி மின்சாரம் தடைப்பட்டது. இதன் விளைவாக தாம்பரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பால் விற்பனை நிலையங்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள் மூடப்பட்டன. இதனால் சில இடங்களில் 4ஆம் தேதியன்று பொதுமக்களுக்கு பால் விற்பனை செய்ய இயலாத நிலை ஏற்பட்டது.
எனவே, அன்று விற்பனை செய்யாத ஆவின் பால் பாக்கெட்டுகள் மற்றும் தனியார் பால் பாக்கெட்டுகளை, சூப்பர் மார்கெட்டுகள் மற்றும் வியாபாரிகள் அப்பகுதியில் கொட்டிவிட்டுச் சென்றதாக தெரிய வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், ஆவின் பால் பாக்கெட்டுகள் வீணாக கால்வாயில் கொட்டப்பட்டது என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:"நான்கு நாட்களாக எங்களது வீட்டிற்கு பால் வரவில்லை" - ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆதங்கம்!