தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாதாந்திர தவணைத் தொகை செலுத்த அளிக்கப்பட்ட கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி! - மாதாந்திர தவணைத் தொகை செலுத்த அளிக்கப்பட்ட கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை: வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய மாதாந்திர தவணைத் தொகையை செலுத்த விலக்களித்த காலத்தை ஜூலை வரை நீட்டிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Moratorium period extension case dismissed as withdrawn
Moratorium period extension case dismissed as withdrawn

By

Published : Apr 24, 2020, 12:17 PM IST

கரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் நாட்டில் பல கோடி பேர் தற்காலிகமாக வருமானத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மார்ச் 27இல் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களிடம் மக்கள் வாங்கியிருக்கும் கடனுக்கான மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாத தவணையைச் செலுத்தாமல், மூன்று மாத காலம் கழித்துச் செலுத்தலாம் என்று கூறியிருந்தது. அதேபோல் கடன் தவணையைக் கேட்டு மக்களுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாதென்று நிதி நிறுவனங்களையும் அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில், வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ”ஊரடங்கு உத்தரவினால் சாலையோர வியாபாரிகள், பெரிய தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் என 90 விழுக்காடு மக்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் நிதி உதவிகளோ, பொருள் உதவிகளோ போதுமானதாக இல்லை.

மாத வருமானம் இருந்தபொழுது வாங்கிய கடன்கள், வீட்டு உபயோக பொருள்களுக்கான தவணை முறையைச் செலுத்த முடியாமல் தவித்து வரும் நிலையில், தவணையை மூன்று மாதங்கள் காலதாமதமாக செலுத்தலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்தது ஆறுதலாக இருந்தாலும், ஊரடங்கு காரணமாக இயல்புநிலை திரும்பாத நிலையில் அதன் தாக்கம் மேலும் நீடிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறி வருவதால் தவணை செலுத்த ஜூன், ஜூலை வரை கால நீட்டிப்பு வழங்க வேண்டும்.

முறையான மாத வருமானம் இருப்பவர்களுக்கு மார்ச் மாதத்திற்கான சம்பளம் கணக்குகளில் செலுத்தப்பட்டவுடன், ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டு இருந்த இசிஎஸ் முறைப்படி அவர்கள் கடனுக்கான தொகை பலரது கணக்கிலிருந்து எடுக்கப்பட்டு விட்டது. அபராதமும் வசூலிக்கப்பட்டது.

தவணை மற்றும் வட்டி செலுத்த விலக்களிக்க காலத்தை ஜூலை 31 வரை நீட்டித்து புதிய அறிவிப்பை வெளியிடும் படி மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உத்தரவிட வேண்டும். அதேபோல் இசிஎஸ் தொகையை வசூலிப்பதற்கான உத்தரவுகளை நிறுத்திவைக்க வங்கிகள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும். ஊரடங்கு காலத்தில் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட அபராத தொகையை வட்டியுடன் மீண்டும் கணக்கில் செலுத்த வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, உரிய ஆய்வுகளை மேற்கொள்ளாமல் இந்த பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செவ்வண்ணன் மோகன் தெரிவித்தார். பின்னர் உரிய மனுவைத் தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதையடுத்து மனுதாரர் மனுவைத் திரும்பப் பெற்றதால் வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details