ஜி.கே. மூப்பனாரின் 18-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஏழை எளிய மக்கள், தொண்டனின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் செயல்பட்டவர் மூப்பனார் என்றார். மூப்பனார் இல்லாதது தமிழ்நாட்டிற்கு பெரும் இழப்பு என குறிப்பிட்ட அவர், காமராஜர் உடன் மூப்பனார் இருந்த காலகட்டத்தை யாராலும் மறக்க முடியாது என்றும் ஜெயலலிதாவிற்கு மிகவும் பிடித்த நபர் மூப்பனார் எனவும் கூறினார்.
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்த ஸ்டாலினின் கருத்துக்கு பதிலளித்த அவர், எந்தத் தகவலும் தெரியாமல், வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என ஸ்டாலின் தேவையில்லாமல் பேசி வருவதாகவும், அவருடைய அரசியல் வாழ்க்கையை எடுத்து பார்க்கும்போது சட்டமன்றத்தில் சட்டையை கிழித்து கொண்டு வந்தவர் என்றுதான் இருக்கும் எனவும் சாடினார்.
அதிமுக ஆட்சியில்தான் இந்தியாவிற்கு ஹூண்டாய், ஃபோர்டு போன்ற நிறுவனங்களை கொண்டுவந்துள்ளோம் என்றும்
அனைத்து சூழ்ச்சிகளையும் முறியடித்து 2021லும் அதிமுக ஆட்சியை அமைக்கும் எனவும் கூறினார்.
முதலமைச்சர் கோட் சூட் அணிந்தது குறித்த சீமான் கருத்துக்கு பதிலளித்த அமைச்சர், இடத்திற்கு ஏற்றார் போல் ஆடை அணிவது வழக்கம் தான் என்றும் கூறினார்.