சென்னை மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்களை பொறுத்தவரையில், சென்னை மாநகராட்சியில் தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்துவதற்கான கால அவகாசம் வரும் ஜனவரி 15, 2023 வரை நீட்டிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த டிசம்பர் 15ஆம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில் ஜனவரி 15 வரை நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சாலையில் வணிக விற்பனையகம் நிகழ்ச்சிகள், அதாவது கமர்ஷியல் ஷாப்பிங் நிகழ்வுகள் மாநகராட்சியின் சாலைப் பகுதிகளில் நடத்த கட்டணம் நிர்ணயம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மீனம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகியப் பகுதிகளில் புதிய நாய் இனக்கட்டுபாடு மையம் அமைக்கும் தீர்மானம்; கரோனா, டெங்கு, மலேரியா தடுப்புப் பணிகளில் பணிபுரிய ஏதுவாக நியமிக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர்களின் ஒப்பந்த காலம் மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்க தீர்மானம் ஆகியவை நிறைவேற்றப்பட்டன.
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் நலமிகு சென்னை மற்றும் நட்புமிகு சென்னை என்ற அடிப்படையில் தனியார் நிகழ்வுகள் நடத்திட அனுமதி வழங்கும் தீர்மானம்; சென்னை மாநகராட்சியின் 10 மண்டலங்களில் 1 லட்சத்து 77 ஆயிரம் தெரு விளக்கு மின் கம்பங்கள் மற்றும் 200 உயர் கோபுர மின் விளக்குகள் இயக்குவதற்கு, பராமரிக்க ஒரு ஆண்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் செய்ய அனுமதி வழங்கும் தீர்மானம் ஆகியவை நிறைவேற்றப்பட்டன.