தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மழை வருது.. மழை வருது.. குடை கொண்டு போங்க! 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! - Chennai rain fall

Monsoon Updates: இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, காரணமாக நாளை (அக். 31) 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவ மழை அறிவிப்புகள்
வடகிழக்கு பருவ மழை அறிவிப்புகள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2023, 2:02 PM IST

சென்னை:வடகிழக்கு பருவமழையானது தொடங்கிய நிலையில், இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நாளை (அக். 31) தென்காசி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இன்று (அக்.30) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், அடுத்து வரும் நாட்களில், நவம்பர் 1 ஆம் தேதி மற்றும் 2 ஆம் தேதி ஆகிய நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், நவம்பர் 3 ஆம் தேதி அன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மற்றும் தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னைக்கான வானிலை முன்னறிவிப்பு: சென்னையை பொருத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும்.

24 மணி நேரம் மழைப்பதிவு: கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, தேனாம்பேட்டை (சென்னை), நாகப்பட்டினம், ராமநாதபுரம் KVK AWS (ராமநாதபுரம்), மீ மாத்தூர் (கடலூர்), மண்டலம் 10 கோடம்பாக்கம் (சென்னை), டிஜிபி அலுவலகம் (சென்னை), குருங்குளம் (தஞ்சாவூர்), செங்கல்பட்டு, மகாபலிபுரம் (செங்கல்பட்டு), விராலிமலை (புதுக்கோட்டை) ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

மேலும் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் சென்னை, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 4 செ.மீ முதல் 1 செ.மீ வரை மழையானது பதிவாகி உள்ளது. மேலும் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மட்டுமே நிலவுவதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை என்பது எதுவும் இல்லை" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை எதிரொலி: முல்லைப் பெரியாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை.. ஆபத்தை உணராமல் பொதுமக்கள் குதூகலம்!

ABOUT THE AUTHOR

...view details