சென்னை:சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் சென்னையின் பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணியானது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், பணிகளில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னையில் 3 வழித்தடங்களில் தற்போது பல்வேறு இடங்களில் உயர்மட்டப்பாதை, சுரங்கப்பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதில் 43.1 கி.மீ-க்கு சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் பாதைகள் அமைத்து, 48 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் பெய்து வரும் வட கிழக்குப் பருவமழையையொட்டி, மாநகராட்சியுடன் இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மெட்ரோ ரயில் நிறுவனம் எடுத்துள்ளது. அதன்படி, “மழைநீர் தேங்கும் பகுதிகளில் மின் மோட்டார் மூலம் மழை நீரை உடனடியாக வெளியேற்றும் வகையில், பல்வேறு திறன்களைக் கொண்ட 350 நீர் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
வழித்தடம் 3-ல் மாதவரம் முதல் கெல்லிஸ் பிரிவில் 55, கெல்லிஸ் முதல் தரமணி வரை 33, மூலைக்கடை முதல் பெரம்பூர் வரை 9, ஓட்டேரி முதல் கெல்லிஸ் பிரிவில் 16, கீழ்ப்பாக்கம் முதல் தரமணி வரை 13, நேரு நகர் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான பிரிவில் 16, சோழிங்கநல்லூர் முதல் சிப்காட் சிறுசேரி வரை 3 என மொத்தம் 145 நீர் பம்புகள் அமைக்கப்பட்டுள்ளன.