Minister Ma Subramanian Press Meet in chennai சென்னை:தமிழகம் முழுவதும் அடுத்த 10 வாரங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற உள்ள மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியின் சென்னை எம்ஜிஆர் நகரில் துவக்கி வைத்தார்.
பின் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் கூறுகையில், ‘அனைத்து வட்டார மருத்துவமனைகளிலும் டெங்குவுக்கு தனி வார்டு உருவாக்கப்பட்டு, சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் ஜனவரி முதல் இதுவரை டெங்குவால் 5,893 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் 607 பேர் தற்போது டெங்கு பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று ஒரே நாளில் 67 பேர் டெங்குவால் பாதிப்பு அடைந்துள்ளனர். தஞ்சாவூரில் இறந்தவர் உள்பட இந்த ஆண்டில் 7 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டில் 3.93 லட்சம் பேருக்கு டெங்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
டெங்குவின் பாதிப்பு சளி, இருமல், காய்ச்சல், சேற்றுப்புண் உள்ளிட்ட மழைக்காலப் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க, இன்று முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை 10 ஞாயிற்றுக்கிழமைகளில் தலா 1,000 மழைக்கால மருத்துவ முகாம்கள் நடைபெறும்.
வடகிழக்கு பருவமழைக் காலங்களில்தான் மழைக்கால நோய் பாதிப்புகள் தொடங்குகின்றன. குறிப்பாக மலேரியா, டெங்கு, காலரா, சேற்றுப்புண், தொண்டை வலி, சளி போன்ற பிரச்னைகள் மழைக்காலங்களில்தான் அதிகமாக வரும். மழைக்காலங்களில் வரும் நோய்கள் தவிர்க்க முடியாத ஒன்று. ஏனென்றால் கொசு உற்பத்தி அதிகமாகவது மழைக்காலங்களில்தான். இத்தகைய நன்னீரில் உருவாகும் ஏடிஸ் கொசுக்கள் மூலமாக டெங்கு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றது.
வடகிழக்கு பருவமழைக் காலத்தில் 10 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடைபெறுவது, இதுவே முதன் முறையாகும். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம்கள் நடைபெறும். பொதுமக்கள் காய்ச்சல் பாதிப்புகள், சளி, தொண்டை வலி போன்ற பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் வேறு பாதிப்புகள் இருந்தாலும், மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும் மருத்துவ முகாம்களில் பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு பயன் பெற வேண்டும்.
சென்னையில் கொசு மருந்து தெளிக்கும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 16,500 கொசு மருந்து தெளிக்கும் உபகரணம் கையிருப்பில் இருக்கிறது. சென்னையில் மழைக்கால பாதிப்புகளைத் தடுக்கும் வகையில் 318 மருத்துவர்கள், 635 செவிலியர்கள், 3,014 களப்பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் இந்த ஆண்டில் 456 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்னர்.
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் நிரப்பப்படாமல் உள்ள இளநிலை மருத்துவப் படிப்பான எம்.பி.பி.எஸ் இடங்களை தேசிய மருத்துவ ஆணையம் தமிழக அரசிடம் ஒப்படைக்க வலியுறுத்தி வழக்கு தொடருவது குறித்து, சட்ட ரீதியாக ஆலோசனையை பெற்று வருகிறோம். இன்னும் சில நாட்களில் சட்ட ரீதியிலான ஆலோசனையைப் பெற்று, முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று வழக்கு தொடருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
இதையும் படிங்க:திருப்பூரில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற ரூ.50 கட்டணம் வசூலிப்பதாக புகார்!