தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை - அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள்

சென்னை: உள்ளாட்சிமன்றத் தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

MHC
MHC

By

Published : Oct 1, 2021, 5:44 PM IST

ஒன்பது மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் மத்திய அரசுப் பணியாளர்களை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும், மத்திய போலீஸ் படையினரை பாதுகாப்புக்கு அமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த மனுவை பரிசீலிக்க மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி அதிமுக தேர்தல் பிரிவு துணைச்செயலாளர் இன்பதுரை வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநிலத் தேர்தல் ஆணையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மாவட்டங்களில் 20 விழுக்காடு வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா மற்றும் இணையதள நேரலை வசதி ஏற்படுத்தப்படும்.

ஸ்டிராங்க் ரூம்(வாக்குப்பதிவிற்கான முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அறை), வாக்கு எண்ணிக்கை மையங்கள் அடையாளம் காணப்பட்டு பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும். சிக்கலான, பதற்றமான வாக்குச்சாவடிகளில் மட்டும் வீடியோ பதிவு செய்யப்படும் என்பன உள்ளிட்டப் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், மாவட்டத்தில் 20 விழுக்காடு வாக்குச்சாவடிகள் மட்டுமல்லாமல் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா மற்றும் இணையதள நேரலை வசதி செய்ய வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையங்கள், ஸ்டிராங்க் ரூம்கள் குறித்த விவரங்களை அரசியல் கட்சிகளுக்கு வழங்க வேண்டும்.

வாக்குச்சாவடிகளில் தொடர்ந்து வீடியோ பதிவுசெய்ய வேண்டும். ஸ்டிராங் ரூம்களுக்கு உள்ளேயும் கண்காணிப்பு கேமரா வைக்க வேண்டும். தேர்தல் பார்வையாளர்களின் விவரங்களைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்த தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், ரகசியமாக செயல்படக்கூடிய தேர்தல் பார்வையாளர்களை அடையாளப்படுத்தமுடியாது. வாக்கு எண்ணிக்கை மையத்திலும், ஸ்டிராங்க் ரூம்களுக்கு வெளியே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவதால், உள்ளே தேவையில்லை.

முடிந்த அளவு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும் தெரிவித்தார். இதையடுத்து, அதிமுகவின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுப்பதாக அரசுத்தரப்பில் ஒப்புதல் தெரிவித்ததைப் பதிவு செய்த நீதிபதிகள், இதே நடைமுறைகளைப் பின்பற்றி தேர்தல் நடத்தப்படும் எனவும் நம்பிக்கைத் தெரிவித்தனர்.

எந்தப் புகாருக்கு இடம் தராத வகையில் அதிகாரிகள் நியாயமான தேர்தல் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டுமானம் இருந்தால் அது இனி 'கட்'

ABOUT THE AUTHOR

...view details