இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கோவிட்-19 பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த, நோயாளிகளுக்கு தொடர் கண்காணிப்பு மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்.
தமிழ்நாட்டில் இதுவரை மூன்று லட்சத்து 49 ஆயிரத்து 654 நபர்கள் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு லட்சத்து 89 ஆயிரத்து 787 நபர்கள் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீண்ட காலத்திற்கான பின்விளைவுகளாக நுரையீரல் சார்ந்த நோய்கள், பக்கவாதம், மாரடைப்பு, சக்கரை நோய், சிறுநீரக நோய்கள், மன அழுத்தம், உடல் சோர்வு போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கோவிட் நோய் தொற்றிலிருந்து குணமடைந்த நான்கு வாரங்களுக்கு பின்னர், ஐசியு-வில் சிகிச்சைப் பெற்றுவந்தவர்கள் , இரண்டு வாரங்களுக்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள், நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு சிடி ஸ்கேன் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற இணை நோய்கள் இருப்பவர்கள் அனைவரும் இந்த மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இந்த மையத்தில் காத்திருப்போர் அறை, பதிவு செய்யும் இடம், இரத்த மாதிரி கொடுக்கும் இடம், உடல் பரிசோதனை அறை, இ.சி.ஜி, சி.டி. ஸ்கேன், மருத்துவர் அறை, உணவு ஆலோசனை, யோகா, மனநல ஆலோசனை மையம், பிளாஸ்மா தானம் செய்ய பதிவு செய்யும் இடம், பரிசோதனை அறிக்கை வழங்கும் இடம் மற்றும் மருந்தகம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த மையம் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாள்களில் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும் .
இந்த மையத்தின் தொடக்க நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.