சென்னை: வியாசர்பாடி எம்.கே.பி நகர் பகுதியைச்சேர்ந்தவர் ஜாக்லின் (27). இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் ஜாக்லின் எஸ்பிஐ வங்கியில் புதிய ஏடிஎம் கார்டு வாங்கியுள்ளார்.
அதனை ஆக்டிவேஷன் செய்வதற்காக கடந்த 6ஆம் தேதி எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்திற்குச் சென்று ஆக்டிவேஷன் செய்துள்ளார். அப்போது ஏடிஎம் கார்டு ஆக்டிவேஷன் ஆகாததால் பின்னால் இருந்த நபரிடம் உதவி கேட்டுள்ளார். அப்போது பின்னால் இருந்த நபர் உதவி செய்வது போல் ஏடிஎம் கார்டை எடுத்துக்கொண்டு வேறொரு ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.
பின்னர் அந்த நபர் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி சுமார் 29 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை திருடியுள்ளார். பணம் எடுத்தது குறித்து குறுஞ்செய்தி ஜாக்லின் செல்போன் எண்ணிற்கு வந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்சியடைந்த ஜாக்லின், இது குறித்து எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளியைத் தேடினர். இந்நிலையில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பிரபு (55) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
பின்னர் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் சென்னை ஆவடியில் இயங்கி வரும் டேங்க் பேக்டரி நிறுவனத்தில் டெக்னீசியனாகப் பணியாற்றி வருவது தெரியவந்தது. மேலும், இவர் ஏடிஎம் மையத்தில் குறிப்பாக பெண்களை குறி வைத்தும் மேலும் பல பேரிடம் ஏடிஎம் கார்டுகளை நூதன முறையில் திருடி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
பின்னர் அவரிடம் இருந்து சுமார் 271 ஏடிஎம் கார்டுகள், 6ஆயிரத்து 500 ரூபாய் பணம், இருசக்கர வாகனம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
ஏடிஎம் மையத்தில் உதவுவது போல் நடித்து ரூ.29,500 திருட்டு இதையும் படிங்க:சென்னை விமானநிலையத்தில் தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போன் பறிமுதல்; பயணியிடம் விசாரணை