சென்னை: சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கிரண் குமார். இவர் தனியார் ஹோட்டல் ஒன்றில் பணியாற்றிவரும் நிலையில், கடந்த ஜனவரி மாதம் அவசரமாகப் பணம் தேவைப்பட்டதால் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்த OB Cash Loan என்ற லோன் செயலி மூலம் ஏழாயிரம் ரூபாய் கடன் கோரி விண்ணப்பித்தார்.
அவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு ஏழாயிரம் ரூபாய் கடன் அளிக்கச் செயலி மூலம் ஒப்புதல் கிடைத்து செயலாக்கக் கட்டணம் போக நான்காயிரத்து 60 ரூபாய் மட்டுமே அவருக்கு அளிக்கப்பட்டது.
மேலும், அடுத்த ஆறு நாள்களுக்குள் கடன் பெற்ற ஏழாயிரம் ரூபாயைத் திருப்பிச் செலுத்த வேண்டும் எனவும் செயலி மூலம் அறிவுறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தொலைபேசி வாயிலாகத் தொடர்ச்சியாக கிரண் குமாரைத் தொடர்புகொண்ட லோன் செயலி நிறுவனத்தார், கடனாகப் பெற்ற ஏழாயிரம் ரூபாய் பணத்தை உடனடியாகத் திருப்பிச் செலுத்துமாறு வற்புறுத்தியும், மிரட்டியும் வந்ததாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் கிரண் குமாரின் குடும்பத்தார், நண்பர்களுக்கு கிரண் குமார் ஒரு கடனாளி, மோசடி நபர் என்பதுபோல் பல குறுஞ்செய்திகள் லோன் செயலி நிறுவனத்தார் மூலம் அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கடன் செயலி மூலம் குடும்பத்தாருக்கு குறுஞ்செய்தி!
அதனைத் தொடர்ந்து கிரண் குமார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் இச்சம்பவம் தொடர்பாகப் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.