சென்னை: இரண்டாம் திருமணத்திற்காக மேட்ரிமோனியில் பதிவு செய்த பெண்களை குறிவைத்து ஒரு கும்பல் பணமோசடியில் ஈடுபடுவதாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் சுமார் 15-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன. குறிப்பாக போலியான பெயர் மற்றும் அடையாள அட்டையை காண்பித்து வெளிநாட்டில் மருத்துவராக பணிபுரிவதாக கூறி பெண்களிடம் பணமோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து டெல்லி சென்ற தனிப்படை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் குடியிருப்பில் பதுங்கி இருந்த நைஜீரியர்களான பாலினஸ் சிகேலுவோ, சிலிடஸ் கேஸ்சுக்வு ஆகிய இருவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து இந்த கும்பலிடம் பல பெண்கள் மோசடியில் சிக்கி இருப்பதால் நைஜீரியர்களை விசாரணை நடத்துவதற்காக மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் நேற்று முந்தினம் (செப்.13) 3 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
விசாரணையில் மோசடி செய்வதற்காகவே ஸ்டூடண்ட் விசா, சுற்றுலா விசா மூலமாக போலி ஆவணங்களுடன் இந்தியாவிற்குள் நுழைந்து டெல்லி உத்தம் நகரில் தங்கி மோசடி செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக கடந்த 5 வருடங்களாக 7 பேர் கொண்ட நைஜீரிய கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 32 பெண்களிடம் 1.5 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக மேட்ரிமோனி மோசடி செய்துள்ளனர்.
இவர்கள் சாலையோரங்களில் வசிக்கும் ஏழை பொதுமக்களிடம் பணத்தை கொடுத்து அடையாள அட்டை பெற்று கொண்டு அதன் மூலமாக வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டு வாங்கியுள்ளனர்.