தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பொய் வழக்குப் போட்டு வெற்றியைத் தடுக்கும் காவல் துறை!' - வசந்தகுமார் குற்றச்சாட்டு - nanguneri bye election

திருநெல்வேலி: பொய் வழக்குப்போட்டு நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றியைத் தடுக்க காவல் துறை முயற்சி செய்வதாக கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எம்.பி வசந்தகுமார்

By

Published : Oct 21, 2019, 7:25 PM IST

நாங்குநேரியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் தொகுதியைச் சாராதவர்கள் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாங்குநேரி கலங்குடி என்ற இடத்தில் அனுமதியின்றி நுழைந்ததாகக் கூறி எச். வசந்தகுமார், அவருடன் வந்த நான்கு பேரை காவல் துறையினர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி, பின்னர் விடுவித்தனர்.

இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், "நாகர்கோவில் செல்வதற்காக நான் காரில் எனது நண்பர்களுடன் சென்றுகொண்டிருந்தேன். ஆலங்குடி அருகே சென்றபோது காவல் துறையினர் என்னை தடுத்து நிறுத்தினார்கள். அப்போது நான் பாளையங்கோட்டைக்குச் செல்வதற்காகத் திரும்பினேன்.

எம்.பி வசந்தகுமார் பேட்டி

ஆனால் காவல் துறையினர் என்னை தொடர்ந்து விரட்டிவந்து எனது காரை நிறுத்தினார்கள். மேலும் சுமார் 40 நிமிடம் காருக்குள்ளே காவல் துறையினர் சிறை வைத்தனர். இதைத் தொடர்ந்து நாங்குநேரி காவல் நிலையத்திற்கு வரவேண்டும் எனத் தெரிவித்தார்கள். அதற்கு நான், 'நீங்கள் என்னை கைதி போன்று அழைத்துச் செல்ல வேண்டாம், நீங்கள் முன்செல்லுங்கள் நான் பின்னால் வருகிறேன்' எனக் கூறினேன். ஆனால் காவல் துறையினர் என்னை கைதி போல அழைத்துச் சென்று மூன்று மணி நேரம் காவல் நிலையத்தில் காக்க வைத்தனர்.

மேலும் தொகுதியில் பணம் விநியோகம் செய்ததாகவும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகவும் கூறி என் மீது பொய் வழக்குப் போட்டார்கள். பொய் வழக்குப் போட்டு காங்கிரஸ் வேட்பாளர் வெற்றியைத் தடுக்கவே காவல் துறை முயற்சி செய்கிறது. ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்" என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சாலை வழியாகச் செல்லக்கூடாதா? எனக் கேள்வியெழுப்பிய அவர், இது குறித்து நாடாளுமன்றத் தலைவருக்கு தகவல் கொடுத்துள்ளதாகத் தெரிவித்தார். எந்த வழக்கு என்றாலும், தாங்கள் சந்திக்கத் தயாராக இருப்பதாகக் கூறிய அவர், அதிமுக எம்.பி. பரப்பாடி சாலையில் நின்றுகொண்டு பணம் விநியோகம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்துள்ளதாகப் புகார் தெரிவித்தார்.

அவரை காவல் துறையினர் கைது செய்யவில்லை என சொன்ன வசந்தகுமார், அப்போ காங்கிரஸுக்கு ஒரு நீதி, அதிமுகவுக்கு ஒரு நீதியா என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க:வன்னியர்கள் வாக்கு யாருக்கு? அதிமுகவின் தோல்வி- பா.ம.க.வின் வீழ்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details