சென்னை:தென்னிந்தியாவில் இந்திப் பேச தெரியாத நபர்களுக்கு இந்தி மொழியை பயிற்றுவிப்பதற்காக 'தக்ஷின் பாரத் இந்தி பிரசார சபை' என்ற கல்வி நிறுவனத்தை, கடந்த 1964ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த அமைப்பு இந்தி மொழியை வளர்க்கும் வகையிலும், இந்தி கற்பவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்புகளை நடத்தி சான்றிதழ் வழங்கி வருகிறது. இலவச இந்தி வகுப்புகளும் நடத்தி வருகிறது.
இந்த அமைப்பிற்கு தென்னிந்தியாவில் ஹைதராபாத், தர்வாத், எர்ணாகுளம், திருச்சி ஆகிய நான்கு இடங்களில் மண்டல அலுவலகங்கள் உள்ளன. அதுமட்டுமல்லாமல் கடலூர், நெய்வேலி, புதுச்சேரி, கோவை, சேலம் உள்ளிட்ட 14 கிளை அலுவலகங்களும் உள்ளன.
இதனிடையே தக்ஷின் பாரத் இந்தி பிரசார சபைக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாகப் புகார் எழுந்தது. குறிப்பாக 2004-2005 நிதியாண்டு முதல் 2016-2017 நிதியாண்டு வரை, இந்த அமைப்பின் தலைவராக இருந்த மறைந்த நிரல்கோட்டி மற்றும் அவரது மகன் சிவயோகி ஆகியோர் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.