சென்னை: “நான் ராஜமங்கலத்தில் உள்ள திருப்பதி பைனான்ஸ் என்ற நிறுவனத்தில் 1 லட்சம் ரூபாய் வட்டிக்கு பணம் வாங்கியிருந்தேன். வாங்கிய கடனுக்கான வட்டியுடன் பணத்தை சரியாக திருப்பிச் செலுத்தி வந்தேன். சமீபத்தில் வேலைக்கு செல்லாததால், என்னால் வட்டியை சரிவர செலுத்த முடியாமல் போனது.
இதனால், திருப்பதி பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த உரிமையாளர் வேலு அடிக்கடி தொலைபேசியில் அழைத்து என்னை மிரட்டினார்’ என்ற தனது வருத்தம் மிகுந்த குரலில் வீடியோ பதிவு செய்துள்ளார், கண்ணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளைஞர்.
கொளத்தூர் மக்காராம் பெருமாள் கோயில் தெருவைச்சேர்ந்த கண்ணன் (28), ஓட்டுநராகப் பணிபுரிந்துவருகிறார். இவர் இன்று (மே 24) காலை வீட்டின் அறையில் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவலறிந்த ராஜமங்கலம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், உயிரிழந்த கண்ணனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதன் பின்னர் கண்ணனின் செல்போனை பறிமுதல் செய்த போலீசாருக்கு வீடியோவில் இருந்த அதிர்ச்சித் தகவல், கண்ணனின் பதிவாகவே கிடைத்தது. இதனையடுத்து தனது மகன் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமாக இருந்த திருப்பதி பைனான்ஸ் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கண்ணனின் தந்தை ஜெய்சங்கர், ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக ராஜமங்கலம் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். அதில், ஒரு லட்சம் ரூபாய் பணத்திற்கு 15% வட்டி என்ற அடிப்படையில் வாரம் பணம் செலுத்த வேண்டும் என கண்ணன் கடன் வாங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. அதேநேரம், அவர் கிட்டத்தட்ட 70,000 ரூபாய் வரை கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்தியுள்ளார்.
கந்துவட்டி கொடுமை - வீடியோ பதிவிட்டு வாலிபர் தூக்கிட்டு தற்கொலை! இதனால், மீதம் செலுத்த வேண்டிய 30 ஆயிரம் ரூபாய் பணத்திற்காக அடிக்கடி பணம் கேட்டு மிரட்டியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ராஜமங்கலம் போலீசார் சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே, கடந்த மே மாதம் 9ஆம் தேதி புளியந்தோப்பு பகுதியில் சித்ரா என்ற பெண் 7 லட்சம் ரூபாய் கடன்பெற்று, 20 லட்சம் ரூபாயை வட்டியுடன் செலுத்த வேண்டும் என மிரட்டிய விவகாரத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பெண்ணின் கைகளை கட்டி தலை முடியை அறுக்கும் கொடூரம் !- வீடியோ வைரல்