தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகர் ரவி மரியா பெயரில் பணமோசடி - சைபர் கிரைமில் புகார்! - பணம் மோசடி

தனது பெயரில் போலி இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கி நட்பு வட்டாரங்களில் நூதனமுறையில் பண மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகர் ரவி மரியா சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 1, 2023, 10:13 PM IST

நடிகர் ரவி மரியா

சென்னை: கோடம்பாக்கம் டாக்டர் கோபால மேனன் தெருவைச் சேர்ந்தவர், ரவி மரியா (51). இவர் ‘ஆசை ஆசையாய்’, ‘மிளகா’ ஆகிய திரைப்படங்களை இயக்கியதுடன், ‘சரவணன் இருக்க பயமேன்’, ‘தேசிங்கு ராஜா’ உள்ளிட்டப் பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று (மார்ச் 01) நடிகர் ரவி மரியா தென்மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் ஐடி ஒன்றை சிலர் உருவாக்கி இருப்பதாகவும், அந்த ஐடி மூலமாக தனது நண்பர்களை ஃபாலோ செய்வதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.

பின்னர் அந்த போலி ஐடி மூலமாக தனது நண்பர்களுக்கு மருத்துவ தேவைக்கு உடனடியாக 10ஆயிரம் ரூபாய் அனுப்ப வேண்டும் என குறுஞ்செய்தி அனுப்புவதாகவும், இதனை நம்பிய பலர் தான் என நினைத்து பணத்தை அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக தனது நண்பர்கள் பலர் தன்னைத்தொடர்புகொண்டு பணம் கேட்பது குறித்து தெரிவித்ததினால் அதிர்ச்சியடைந்து, உடனடியாக தனது பெயரில் போலி ஐடியை உருவாக்கி பண மோசடியில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகாரில் தெரிவித்துள்ளார். இந்தப் புகார் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த மோசடியில் தனது நண்பர் ஒருவர் சிக்கி 7 ஆயிரம் ரூபாய் இழந்ததாகவும், இதே போல எத்தனை பேர் இந்த மோசடியில் பணத்தை இழந்தனர் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என நடிகர் ரவி மரியா தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஐடி தன்னுடையது இல்லை; போலியானது எனவும்; பணம் யாரும் அனுப்ப வேண்டாம் என்றும்; இதற்கு தான் பொறுப்பில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் தான் யாரிடமும் கடன் வாங்கியதில்லை என்றும்; கடன் கொடுத்து தான் வழக்கம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து புது விதமான சைபர் கிரைம் மோசடியில் சிக்கி ஏழை, எளியோர் பணத்தை இழக்கும் சம்பவங்கள் பரிதாபமாக இருப்பதாகவும், பெரும்பாலும் ஆன்லைன் மூலமாக தான் மோசடி நடைபெறுவதாகவும் தேவையற்ற லிங்க்குகளை தொட வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு நடிகர் ரவி மரியா வேண்டுகோள் விடுத்தார்.

ஆன்லைன் வந்ததிலிருந்து சோம்பேறித்தனமும், ஏமாற்றமும் அதிகரித்துவிட்டதாக அவர் தெரிவித்தார். சைபர் கிரைம் மோசடியில் தான் சிக்கியதால், சைபர் கிரைம் தொடர்பாக ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.30.8 லட்சம் மோசடி - 5 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details