சென்னை தாம்பரம் அடுத்த கிருஷ்ணா நகர் பகுதியில் விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் தியாகராஜ். இவர் சுமார் நான்கு வருடங்களாக அப்பகுதியில் சூப்பர் மார்க்கெட் கடை வைத்து நடத்திவருகின்றார். இந்த நிலையில் இன்று (மே.6) காலை கடையை திறந்து பார்த்தபோது பொருள்கள் எல்லாம் கலைந்திருந்தது. பின்னர் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது மேற்கூரை ஓட்டையிடப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனே சூப்பர் மார்க்கெட்டிலுள்ள பீரோக்களை சென்று பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு, அதிலிருந்து சுமார் இரண்டு லட்சம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது. அதுமட்டுமின்றி அங்கிருந்த சாக்லேட், விலை உயர்ந்த பாதாம், பிஸ்தா ஆகியவைகளும் காணாமல் போனது தெரியவந்தது.
இதுகுறித்து தாம்பரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் தாம்பரம் குற்றப்பிரிவு காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தபோது, ஒரு நபர் மேல் கூரையை ஒட்டையிட்டு உள்ளே சென்று பணம் மற்றும் பொருள்களை திருடி சென்றது தெரியவந்தது.