தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"கட்சிகள் சமூக நீதி பேசும் சூழலில்தான், குடிநீரில் மலம் கலக்கும் சம்பவம் நடக்கிறது" - ஆளுநர் ரவி!

சமூக நீதி என்று பல கட்சிகளும் பேசி வரும் நிலையில்தான் குடிநீரில் மலம் கலப்பது போன்ற பட்டியலின மக்களுக்கு எதிரான சம்பவங்கள் நடக்கின்றன என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். இவ்வாறு வேங்கைவயல் சம்பவத்தை ஆளுநர் மறைமுகமாக சாடியுள்ளார்.

che
che

By

Published : Feb 12, 2023, 6:08 PM IST

சென்னை:பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றிய "மோடி@20: நனவாகும் கனவுகள்", "அம்பேத்கர் மற்றும் மோடி" ஆகிய இரண்டு புத்தகங்களின் வெளியீட்டு விழா, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி புத்தகங்களை வெளியிட, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷயன் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என். ரவி, "தமிழ் மொழி வளமான பழமையான மொழி. இத்தகைய மொழியில், இந்த இரண்டு நூல்களும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. இந்த இரண்டு நூல்களை படிப்பதன் மூலமாக, நம் நாட்டில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

'மோடி@20' நூல் வெளியீட்டு விழா

இயற்கையாகவே, நாம் அனைவரும் ஒன்றிணைந்தவர்கள். மதம், இனம், சாதி ஆகியவற்றின் அடிப்படையில் உருவான பிளவுகள், ஏற்றத்தாழ்வுகள்தான் சமூகத்தில் பதற்றங்களுக்கு வழிவகுத்தன. ஆனால், தற்போது எந்த பாகுபாடும், பிரிவும் இல்லாமல் நாடு உள்ளது. நான் அறிந்த வரையில் அம்பேத்கர் குறித்து பலர் முழுவதுமாக அறிந்து கொள்ளவில்லை. அவரை அரசியல் சார்ந்து மட்டும் பேசுகின்றனர்.

இன்று சமூக நீதி என்று பல கட்சிகளும் பேசி வரும் நிலையில்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பல்வேறு சம்பவங்கள் நடக்கின்றன. குடிநீரில் மலத்தை கலப்பது, பட்டியலின பெண்கள் தாக்கப்படுவது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பட்டியலின பெண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவங்களில், 100 வழக்குகளில் 93 பேர் தண்டிக்கப்படாமல் சுதந்திரமாக உள்ளனர்.

இஸ்லாமிய பெண்களுக்கு முத்தலாக் மூலம் விடுதலையை ஏற்படுத்தித் தந்தவர், மோடி. பெண்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நாம் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இருக்கிறோம். 11 கோடி வீடுகளில் இன்று கழிவறைகள் உள்ளன, குடிநீர் கிடைக்கிறது. 8 ஆண்டுகளில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

நீங்கள் இந்த புத்தகத்தை வாசிக்கும்போது அனைத்து தரப்பு மக்களைப் பற்றியும் தெரிந்துகொள்ள முடியும். என் இளம் நண்பர்களை வேண்டிக்கொள்கிறேன், இந்த புத்தகங்களை படியுங்கள், அதைப் பற்றி சிந்தியுங்கள், நாட்டின் முன்னேற்றத்திற்கு துணையாக நில்லுங்கள்" என்று கூறினார்.

இதையும் படிங்க: "ஈரோட்டில் அமைச்சர்கள் முகாமிட்டு பணப்பட்டுவாடா செய்வது ஜனநாயகத்திற்கு எதிரானது" - பிரேமலதா

ABOUT THE AUTHOR

...view details