சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரதமர் மோடி அங்கிருந்து சென்னை விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலம் வந்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மெரினா கடற்கரையையொட்டியுள்ள அடையாறு ஐ.என்.எஸ். கடற்படை தளத்துக்கு வந்தார். தொடர்ந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு உள் விளையாட்டரங்கித்திற்கு வந்தார்.
இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டப் பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து, பல்வேறு கட்டமைப்பு செயல் திட்டங்களை காணொலி வாயிலாக பிரதமர் தொடங்கி வைத்தார். தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 30 கி.மீ., தூரத்துக்கு 598 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 3ஆவது ரயில் பாதையைத்திறந்து வைத்தார். இதேபோல், மதுரை - தேனி இடையே 506 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையையும் திறந்து வைத்தார்.
எண்ணூர் - செங்கல்பட்டு பிரிவில் 115 கி.மீ. தூரத்துக்கு 849 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். பெங்களூரு - திருவள்ளூர் பிரிவில் 271 கி.மீ., தூரத்துக்கு எரிவாயு குழாய்கள் 911 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த செயல் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.