சென்னை:பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்தும் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ராஜீவ் காந்தி சிலை அருகே தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசிற்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.
'நாட்டின் பொருளாதாரத்தை தனி மனிதரின் கையில் கொடுக்கிறார் மோடி' - காங்கிரஸ் கண்டன ஆர்பாட்டம்
நாட்டின் பொருளாதாரத்தை முடக்கி, அவற்றை தனி மனிதனின் கையில் ஒப்படைப்பதற்காக மோடி தலைமையிலான அரசு முயற்சிக்கிறது என காங்கிரஸ் எம்.பி ஜெயக்குமார் குற்றஞ்சாட்டினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்பி ஜெயக்குமார், "மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களின் கையில் அதிகாரத்தை கொடுக்க பிரதமர் மோடி உழைத்து வருகிறார். நாட்டின் பொருளாதாரத்தை முடக்கி தனி ஒரு மனிதரின் கையில் ஒப்படைக்க இந்த அரசு முயற்சித்துவருகிறது. அதனை தடுப்பதற்காகவே நாம் போராடி கொண்டிருக்கிறோம்" என்றார்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.