சென்னை:மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், புதிய மின்சார திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், திமுக தலைமையில் தோழமைக் கட்சித் தலைவர்கள் இன்று (டிச. 18) ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருகின்றனர். காலை 9 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதம் மாலை 5 மணிக்கு நிறைவுபெற உள்ளது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், "மத்திய அரசின் இந்த சட்டங்கள் உழவர்களுக்கு எதிரானது. மாநில சுயாட்சிக்கும் எதிரானது. 130 கோடி இந்திய மக்களின் உணவு உரிமைக்கு எதிரான சட்டம்.
இந்த சட்டத்தின் மீது விவாதம் நடந்த பொழுது மானமுள்ள ஒரு அமைச்சர் மறுநிமிடமே ராஜினாமா செய்து வெளியேறினார். ஆனால், சிலர் இந்த நிமிடம் வரை சட்டத்திற்கு ஆதரவளிக்கின்றனர். இச்சட்டம் குறித்த மூன்று மணி நேர விவாதத்தில் இரண்டு மணி நேரம் ஆளும் பாஜக அரசும் அதன் கூட்டணி கட்சிகளும் ஆதரவு தெரிவிக்கவே ஒதுக்கினர். ஆனால், இந்த அரசை 20 மணிநேரம் பேச்சுவார்த்தையில் உட்கார வைத்த பெருமை இந்தியாவின் விவசாயிகளுக்கும் இந்தியாவின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் அரசியல் கட்சிகளுக்கும் சாரும்.
அதுமட்டுமின்றி, எங்கே போராட வேண்டும், என்ன பேசவேண்டும் என்பதையும் அதிகார திமிருடன் நடப்பவர்களுக்கு உணர்த்தியுள்ளனர். மேலும், 18 பக்கம் கொண்ட மூன்று சட்டங்களில் என்னவெல்லாம் திருத்தம் செய்யவுள்ளோம் என அனுப்பியக் கடிதம் 19 பக்கங்களைக் கொண்டுள்ளது.