சென்னை:ஆயுஷ் நிபுணர்கள் மற்றும் பாரம்பரிய மருத்துவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி, சென்னை ஆளுநர் மாளிகை பாரதியார் மண்டபத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நேற்று (டிச.14) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், “ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி எனப்படும் ஆயுஷ் சிகிச்சை முறைகள் பாராட்டுக்கு உரியது. நவீன மருத்துவ அறிவியல் ஒரு குறிப்பிட்ட புள்ளி வரையே செயல்படும்.
அது சொந்தமாக சில பக்க விளைவுகளைக் கொண்ட குணப்படுத்தும் அணுகுமுறையுடன் உடலை ஒரு இயந்திரமாகப் பார்க்கிறது. பாரம்பரிய மருத்துவம் உடல் வடிவம், மனம் மற்றும் ஆன்மாவை உள்ளடக்கிய ஒரு முழுமையான அமைப்பாக உடலை எடுத்துக் கொள்கிறது.
நவீன மருத்துவத்தின் வரவுக்கு முன்பே பாரம்பரிய மருத்துவ முறைகள் மனிதகுலத்தை நீண்ட காலமாக பராமரித்து வந்தன. பாரம்பரிய மருத்துவம் நீண்ட கால பரிசோதனை மற்றும் அனுபவத்திற்குப் பிறகு வந்தன. நவீன அறிவியலால் அது ஒருபோதும் மறைக்கப்படவோ, ஓரங்கட்டப்படவோ கூடாது.
நவீன அறிவியலின் வரவு என்பது, பாரம்பரிய மருத்துவம் உட்பட பாரம்பரிய ஞானம், பழமையான பயனுள்ள சில வைத்திய முறைகள் ஆகியவற்றை மறைக்கும் வகையில் உள்ளது, இது மனிதகுலத்திற்கு நல்லதல்ல. நாம் நவீன அறிவியலை ஏற்றுக் கொண்டாலும், பாரம்பரிய ஞானத்தை இழக்க முடியாது.
நவீன மருந்துகளில் சில வரம்புகள் உள்ள பகுதிகள் உள்ளன. ஆனால், நம்மில் பெரும்பாலானோர் அனுபவித்த பாரம்பரிய மருத்துவம் ‘நவீன மருத்துவம்’ வழியைக் காட்டாதபோது நமக்கு உதவியிருக்கிறது” என்றார். பின், பாரம்பரிய மருத்துவத்தின் அறிவியல் பூர்வ சாத்தியம் பற்றி பேசுகையில், “அது பல சவால்களை எதிர்கொள்கிறது. அதை உறுதிப்படுத்த ஆழமான ஆராய்ச்சி அவசியம்.
நமது மக்களின் ஆரோக்கியம் மற்றும் உடல்நலனில் பாரம்பரிய மருத்துவ முறைகளின் பங்கும் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் முன்முயற்சிகள், ஆயுஷ் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தின் சந்தைப் பங்கை சுமார் ரூ.2 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.