சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக இன்று (செப்.28) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நாளை (செப்.29 ஆம் தேதி) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.