சென்னை: தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், அகில இந்திய குடிமைப் பணிகளில் அடங்கிய முதல்நிலை, முதன்மைத் தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள, சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள, ஏழை, எளிய ஆர்வலர்களுக்கு பயனளிக்கும் வகையில், இப்பயிற்சி மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இது குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ’இப்பயிற்சி மையத்தில் செப்டம்பர் 26 முதல் நவம்பர் 28 வரை மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட இந்திய வனப்பணி முதன்மைத் தேர்விற்காக 9 ஆர்வலர்கள் தங்கி பயின்றார்கள். அவர்களில் 5 ஆர்வலர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 3 ஆர்வலர்கள் மகளிர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய வனப்பணி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சார்ந்த ஆர்வலர்களுக்கு இப்பயிற்சி மையத்தின் மூலம் மாதிரி ஆளுமைத் தேர்வு, பணியில் உள்ள ஓய்வு பெற்ற அகில இந்திய குடிமைப் பணி அலுவலர்களாலும், தலை சிறந்த வல்லுநர்களாலும் நடத்தப்பட உள்ளது. இது, தேர்ச்சி பெற்றுள்ள ஆர்வலர்கள், தங்களது மாதிரி ஆளுமைத் தேர்வை மிகச் சிறப்பான முறையில் எதிர்கொள்ள ஏதுவாக அமையும்.