தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வுப் பயிற்சி மையத்தால் நடத்தப்பட்ட மாதிரி ஆளுமைத் தேர்வு - latest tamil news

அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வுப் பயிற்சி மையத்தால், மாணவர்களுக்கு மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்பட்டது.

பயிற்சி மையத்தால் நடத்தப்பட்ட மாதிரி ஆளுமைத் தேர்வு
பயிற்சி மையத்தால் நடத்தப்பட்ட மாதிரி ஆளுமைத் தேர்வு

By

Published : Jan 4, 2023, 10:53 PM IST

சென்னை: தமிழ்நாட்டிலுள்ள இளைஞர்கள் குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்று அரசின் உயர் பதவிகளில் பணியமர்த்தப்பட வேண்டும் என்கிற உயரிய நோக்கோடு அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்பட்டது. இப்பயிற்சி மையத்தின் மூலம் ஆயிரக்கணக்கான ஆர்வலர்கள் வெற்றி பெற்று இந்திய அளவில் உயர் பதவியில் செம்மையாக பணியாற்றி வருகின்றனர்.

இது குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "இம்மையம் கடந்த 56 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக சென்னையில் பசுமை வழிச்சாலையில் “காஞ்சி” வளாகத்தில் இயங்கி வருகிறது. ஆர்வலர்கள் தங்குவதற்கு அறைகளும், கட்டணமின்றி உணவும் அளிக்கப்பட்டு வருகிறது. 25,000 நூல்கள் கொண்ட நூலகம் ஒன்றும் இப்பயிற்சி மையத்தில் அமைந்துள்ளது.

செப்டம்பர் 2022-இல் மத்திய தேர்வாணையம் நடத்திய குடிமைப்பணிகள் முதன்மைத் தேர்வின் இறுதி முடிவு 06.12.2022 அன்று வெளியிடப்பட்டதில், இப்பயிற்சி மையத்தில் தங்கிப் பயின்ற 19 தேர்வர்களும், 23.12.2022 அன்று வெளியிடப்பட்ட வனப்பணி முதன்மைத் தேர்வு முடிவுகளில், இப்பயிற்சி மையத்தில் தங்கிப் பயின்ற 9 தேர்வர்களில் 5 தேர்வர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

இவர்கள் புது டெல்லியில் ஆளுமைத் தேர்வை சந்திக்க உள்ளனர். இம்மையத்தில் பயின்று வெற்றி பெற்ற தேர்வர்களுக்கு மட்டுமல்லாமல், முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த அனைத்து தேர்வர்களுக்கும், மாதிரி ஆளுமைத் தேர்வை இம்மையம் ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.

தேர்வர்களுக்கு மாதிரி ஆளுமைத் தேர்வு மிகப் பெரிய பயிற்சியாக அமைவதோடு, தங்களது செயல்பாட்டை மேலும் எவ்வாறு மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற தெளிவையும் தருகிறது. அதனால் பல தேர்வர்கள் இதில் கலந்துகொண்டு அனுபவங்களையும், அறிவுரைகளையும் பெற்று பயன் அடைந்திருக்கின்றனர்.

இம்முறையும் 02.01.2023 திங்கட்கிழமை, 03.01.2023 செவ்வாய்கிழமை ஆகிய இரு நாட்களில் நடத்தப்பட்ட மாதிரி ஆளுமைத் தேர்வில், 46 குடிமைப்பணித் (IAS & IPS) தேர்வர்களும், 8 வனப்பணித் (IFS) தேர்வர்களும் கலந்துகொண்டனர். இதில், 25 மகளிரும், 2 பார்வைத்திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகளும் உட்படுவர்.

முதல் நாள் காலை மாதிரி ஆளுமைத் தேர்வுக்கு முன்னர் ஆளுமைத் தேர்வு குறித்தும், அதில் தேவைப்படுகிற திறன்கள் குறித்தும் தேர்வர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டதுடன், அவர்களின் சந்தேகங்களுக்கும் விடையளிக்கப்பட்டது. மாதிரி ஆளுமைத் தேர்வினை நடத்த ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிலும் கூடுதல் தலைமைச் செயலாளர் நிலையில் ஓய்வுபெற்ற / பணியிலிருக்கும் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள், பேராசிரியர்கள், தேர்வர்களின் உடல் மொழி, விடையளிக்கும் முறை, தகவல் பரிமாற்ற திறன் போன்றவற்றை கவனமுடன் பரிசீலனை செய்கிற உளவியல் நிபுணர்கள் ஆகியோர் இடம் பெற்றனர்.

மாதிரி ஆளுமைத் தேர்வில் தேர்வர்களின் ஆளுமைத் தோற்றம், முன்னெடுக்கும் பண்பு, தலைமைப் பண்பு, தனித் திறன், தன்னம்பிக்கை, அறிவாற்றல், தகவல் பரிமாற்றம், உடல் மொழி, அறநெறி, ஊக்கத்திறன் போன்ற பத்து பண்புகள் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு, நூறு சதவிகிதத்திற்கு மதிப்பெண்கள் அளிக்கப்பட்டது. பின்னர், தேர்வர்களிடம் அவர்கள் செயல்பட்ட விதம் குறித்து எடுத்துக் கூறி, மேலும் எவ்வாறு தங்களை செம்மையாக செதுக்கிக்கொள்ள வேண்டும் என்கிற அறிவுரையும் வழங்கப்பட்டது.

மாதிரி ஆளுமைத் தேர்வில் கலந்துகொண்டபோது தேர்வர்கள் எவ்வாறு விடையளித்தனர் என்பதைப் பார்த்து, அவர்களின் குறைபாடுகளைக் களைய ஏதுவாக, காணொலிக்கருவி மூலம் அவர்களது செயல்பாட்டை பதிவு செய்து, அப்பதிவு தேர்வர்களுக்கு வழங்கப்பட்டது. அப்பதிவினை தேர்வர்கள் தேவைப்படும்போது பார்த்து, தகவல் பரிமாற்றம், உடல்மொழி, மொழியில் சரளத்தன்மை போன்றவற்றை ஆளுமைத் தேர்விற்கு முன்பு தயார் செய்துகொள்ள முடியும்.

மாதிரி ஆளுமைத் தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கு அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி வளாகத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. ஆளுமைத் தேர்வில் கலந்து கொண்ட ஒவ்வொரு தேர்வர்களுக்கும், புதுடெல்லி சென்று வருவதற்குப் போக்குவரத்து செலவினமாக ரூ.5,000 வழங்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:சென்னை மெட்ரோ பணிகள்; புரதானச் சின்னங்கள் பாதிக்காது - தமிழக அரசு பதில்

ABOUT THE AUTHOR

...view details