சென்னை: சென்னை கந்தன்சாவடி திருவிக தெருவை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மகள் ப்ரீத்தி(22). இவர் கோட்டூர்புரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2ம் தேதி மாலை 4 மணியளவில் ப்ரீத்தி வழக்கம் போல பணியை முடித்துவிட்டு பறக்கும் ரயிலில் கண்ணன் சாவடி நோக்கி வந்துள்ளார்.
அப்போது இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு ஒன்றாம் நடைமேடையில் பிரீத்தி படுகாயங்களுடன் கிடப்பதாக அருகில் இருந்த பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் திருவான்மியூர் ரயில்வே காவல்துறையினர் படுகாயம் அடைந்த பிரீத்தியை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிம்ஸ் மருத்துவமனைக்கு பிரீத்தி அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இளம்பெண் ப்ரீத்தி சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையே ப்ரீத்தியின் செல்போன் காணவில்லை எனவும் செல்போன் பறிக்கும்போது ப்ரீத்தி தவறி விழுந்து உயிர் இழந்திருக்க கூடும் என ப்ரீத்தியின் பெற்றோர் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது எதுவும் கிடைக்காததால், அருகில் இருந்த வியாபாரிகளிடம் விசாரணை மேற்கொண்ட போது, ஒரு நபர் அந்த நேரத்தில் வேகமாக வெளியே ஓடியதாக தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து திருவான்மியூர் ரயில்வே போலீசார் ப்ரீத்தியின் செல்போன் எண்ணை வைத்து ட்ராக் செய்த போது, பட்டினப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவரிடம் செல்போன் இருப்பதை போலீசார் கண்டறிந்து அவரை பிடித்தனர். அவர் அளித்த தகவலின் பெயரில் மற்றொரு நபரான மணிமாறன் என்பவரையும் போலீசார் பிடித்து இவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.