தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குபதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்ததைத் தொடர்ந்து அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு, பரப்புரை, தேர்தல் அறிக்கை வெளியீடு என அரசியல் கட்சிகள் தீவிரமாக களத்தில் செயலாற்றி வருகின்றன.
பிரதான கூட்டணிகளான அதிமுக, திமுக கூட்டணிகளுக்கு நிகராக, நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியும் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதனிடையே, அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, திமுக கூட்டணியிலிருந்து விலகிய ரவி பச்சமுத்துவின் ஐஜேகேவும் இணைந்து 'மாற்றத்திற்கான கூட்டணி'யை உருவாக்கின. அந்த இரு கட்சிகளும் கமலைச் சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தின.
பின்னர், அண்மையில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சி பொதுக் குழு கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம், சமக, ஐஜேகே கூட்டணி உறுதி என அக்கட்சியின் தலைவர் சரத்குமார் பேசினார். கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை மேற்கொள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுடன் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் ரவி பச்சமுத்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி கூட்டணி உறுதியாகிவிட்டன.