நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பங்கேற்று மூன்று விழுக்காடு வாக்குகளைப் பெற்றது. கட்சி தொடங்கிய சிறிய காலத்திலேயே மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறாவிட்டாலும் மக்களின் நம்பிக்கையைப் பெற்றது.
அதேபோன்று கிராமங்களில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். மக்களவைத் தேர்தலை தொடர்ந்து நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் மநீம அறிவித்தது.
ஜெயலலிதா மறைவிற்குப் பின்பு, தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா? நடைபெறாதா என்ற குழப்பங்கள் நீடித்து வந்தன. மூன்று வருடங்களாகத் தடைபட்டு கிடக்கும் உள்ளாட்சித் தேர்தல், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர; டிசம்பர் 27, 30ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் உறுதி பட தெரிவித்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், நடைபெற இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு நகல் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடைபெற இருக்கும் மக்களாட்சித் தேர்தல் முழுமையான மக்களின் தேர்வாக இருக்கப் போவதில்லை. இந்த உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பங்கு பெறுவதால், கிட்டக் கூடிய முன்னேற்றம் சொற்பமானது. இந்தத் தேர்தலில் மக்களின் பங்கீடு மிகக் குறைவாகவே இருக்கும் என்பது உறுதியாகிவிட்டது.
ஊழல் கட்சிகள் தங்களுக்குள் போட்டுக்கொண்ட வியாபாரப் பங்கீடு மட்டுமே அரங்கேறப்போகிறது. எங்களுக்கு தேவை பண பலம் அல்ல, நேர்மையும், மக்கள் பலமே. இனி வரும் ஐம்பது வாரங்களில் மக்கள் நலம் பேணி நற்பணிகள் செய்வோம். நாளை பறக்கப்போகும் நம் வெற்றிக்கொடியே தமிழ்நாட்டின் அன்னக்கொடியுமாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ‘யாருக்கும் ஆதரவு கிடையாது’ - உள்ளாட்சி தேர்தல் குறித்து ரஜினி அறிக்கை!