சென்னை: சென்னை அடையாறில் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் அடுத்தகட்டப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அப்போது நிர்வாகிகள் மத்தியில் பேசிய அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், "இந்தியாவில் மத அரசியலை பாஜக செய்து வருகிறது. மதத்திற்குள் பிரிவினை செய்வதை எதிர்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. மத அரசியல் இந்தியாவை சிதைத்துவிடக்கூடாது என்ற நோக்கத்திற்காகத் தான் ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்றேன்.
கட்சியினர் அனைவரும் ஒரே வித கருத்தோடு செயல்பட வேண்டும். கட்சி தற்போதுதான் தொடங்கப்பட்டுள்ளது என்பதால், தலைவர் கூறும் கருத்தை மட்டுமே நிர்வாகிகள் வெளி இடங்களில் பேச வேண்டும். கட்சி தலைமை கூறுவதற்கு மாறாக செயல்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், "பொங்கல் பண்டிகை வரவிருக்கும் சூழலில், சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது. சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைக்கும் என நம்புகிறோம். அனுமதி கிடைக்கும் பட்சத்தில், அதற்கான அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் வெளியிடும். மெரினாவில் ஜல்லிக்கட்டு நடத்த இயலாத பட்சத்தில் வேறு இடத்தை தேர்வு செய்வோம்" என்று குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: பெண் காவலருக்கு பாலியல் தொல்லை - சம்பவம் நடந்த அன்றே திமுக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு?