சென்னை:நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, தேர்தலைச் சந்தித்தது. சுமார் 142 தொகுதிகளில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம், ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை.
மநீமவின் அடுத்தகட்ட நடவடிக்கை
இதையடுத்து, அக்கட்சியின் துணைத்தலைவர், பொதுச்செயலாளர்கள் உள்ளிட்டோர் அடுத்தடுத்து கட்சியிலிருந்து விலகினர். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியினை வலுப்படுத்த தேவையான மாற்றங்களை செய்வதாக மே 24ஆம் தேதி காணொலி வாயிலாக கட்சி உறுப்பினர்களிடம் அக்கட்சித் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, கட்சியின் கட்டமைப்பை மேம்படுத்த புதிய குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் மூலம் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகள், அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசனிடம் ஒப்படைக்கப்பட்டது.
இணைய வழி கலந்துரையாடல்
இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் அடுத்தகட்ட பயணம், கட்சிக் கட்டமைப்பினை வலுப்படுத்துதல், புதிய நிர்வாகிகள் அறிவிப்பு உள்ளிட்ட ஐந்து முக்கிய விஷயங்கள் குறித்து மநீம தலைவர் கமல் ஹாசன் இன்று (ஜூன் 26) இணையவழி கலந்துரையாடலில் பேசினார்.
கரோனா தடுப்பூசி கட்டாயம்
அப்போது அவர், "கட்சி உறுப்பினர்களும் நிர்வாகிகளும் தங்களது உடல்நலனில் முழுக்கவனம் செலுத்த வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உடனடியாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
மண், மொழி, மக்கள் காக்க களம்கண்ட நமது கட்சியை வலுப்படுத்தவும், நமது கொள்கைகளை செயல்திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டுசேர்க்கவும் சில புதிய நியமனங்களைச் செய்திருக்கிறேன்.
உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராவோம்! - புதிய நிர்வாகிகளுக்கு கமல் ஊக்கம் கட்சிக்கு வலுசேர்க்கும் புதிய நியமனங்கள்
அதன்படி, கட்சியின் தலைவர் என்னும் பொறுப்புடன் கூடுதலாகக் கட்சியின் பொதுச்செயலாளர் என்னும் பொறுப்பினையும் ஏற்று பணியாற்ற இருக்கிறேன். புதிதாக இரு அரசியல் ஆலோசகர்கள், இரண்டு துணைத் தலைவர்கள், மூன்று மாநிலச் செயலாளர்கள், நிர்வாகக்குழுவில் மேலும் ஒரு உறுப்பினர், நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சில அறிவிப்புகள் இனி வரும் நாள்களில் வெளியாகும். புதிய மாநிலச் செயலாளர்கள் ஏற்கனவே நமது கட்சியின் வேட்பாளர்களாக கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் களம் கண்டவர்கள்தான்.
புதிய நியமனங்கள்
- பழ. கருப்பையா – அரசியல் ஆலோசகர்
- பொன்ராஜ் வெள்ளைச்சாமி – அரசியல் ஆலோசகர்
- ஏ.ஜி. மெளரியா – துணைத் தலைவர் – கட்டமைப்பு
- தங்கவேலு – துணைத் தலைவர் – களப்பணி மற்றும் செயல்படுத்துதல்
- செந்தில் ஆறுமுகம் – மாநிலச் செயலாளர் – தகவல் தொழில்நுட்பம் & செய்தித் தொடர்பு
- சிவ. இளங்கோ – மாநிலச் செயலாளர் – கட்டமைப்பு
- சரத்பாபு – மாநிலச் செயலாளர் – தலைமை நிலையம்
- ஸ்ரீப்ரியா சேதுபதி - நிர்வாகக் குழு உறுப்பினர்
- ஜி. நாகராஜன் – நற்பணி இயக்க ஒருங்கிணைப்பாளர்
மக்கள் சேவைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட தலைமைப்பண்பு மிக்க இவர்கள், உங்களோடு சேர்ந்து உழைத்து கட்சியினை வலுவாக்குவார்கள். உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. அதற்கு நாம் தயாராக வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க:ஒலிம்பிக்: ரூ.3 கோடி பரிசுத்தொகை - ஸ்டாலின் அறிவிப்பு