தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எம்எல்ஏ அன்பழகன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் - திமுக அன்பழகன்

சென்னை: கரோனா பெருந்தொற்றால் உயிரிழந்த திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் மறைவிற்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு பாஜக தலைவர் முருகன், கனிமொழி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்துவருகின்றனர்.

dmk-mla-anbazhagan
dmk-mla-anbazhagan

By

Published : Jun 10, 2020, 11:35 AM IST

Updated : Jun 10, 2020, 3:15 PM IST

திமுக சட்டப்பேரவை உறுப்பினரும், அக்கட்சியின் மூத்த நிர்வாகியுமான ஜெ. அன்பழகன் கரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்றுவந்தார்.

இந்நிலையில், இன்று காலை அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கலைத் தெரிவித்துவருகின்றனர்.

அதன்படி, தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது ட்விட்டரில், "சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினரும், திமுகவின் நிர்வாகியுமான ஜெ. அன்பழகன் இன்று காலை சிகிச்சைப் பலனின்றி காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன்.

அவரின் பிரிவால் மீளாத்துயரிலிருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல், அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டு, அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ட்விட்டரில், "கரோனா சிகிச்சைப் பெற்றுவந்த சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன், இன்று உயிரிழந்தார் என்கிற செய்தி மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

நாடளுமன்ற உறுப்பினரும், திமுகவின் மகளிரணிச் செயலாளருமான கனிமொழி தனது ட்விட்டரில், "திமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் மறைவு திமுக கட்சிக்கு ஈடுகட்ட முடியாத பேரிழப்பு" எனக் கூறியுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டரில், "ஜெ. அன்பழகன் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கரோனாவால் அவர் மறைந்தது நமது வேதனையை அதிகமாக்குகிறது.

அவரது ஆன்மா இறைவனின் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் தனது ட்வீட்டில், "ஜெ. அன்பழகன் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" எனப் பதிவிட்டுள்ளார்.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தனது இரங்கல் செய்தியில்,

"கோவிட்-19 என்று அழைக்கப்படும் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி சிகிச்சை பெற்றுவந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் மரணமெய்தினார் என்ற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உற்றார் உறவினர், அவரின் கட்சியினர் ஆகியோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கோவிட்-19 அபாயகரமான தொற்று என்பதை அறிந்தும் அவர் தனது தொகுதி மக்களுக்கு, சென்னை வாழ் மக்களுக்கு களமிறங்கி பல்வேறு நலத்திட்டப் பணிகள் செய்து வந்தார்.

அவருடைய இழப்பு அவருடைய தொகுதி மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பெரும் இழப்பு ஆகும். பொதுத் தொண்டாற்றினாலும், முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது, கைகளை கழுவுவது போன்ற அம்சங்களை அனைவரும் கடுமையாக பின்பற்றவேண்டும் என்பதே தமிழக மக்கள் கற்றுக் கொள்ளவேண்டிய பாடம்" என்று குறிப்பிட்டுள்ளார்

டாக்டர் கிருஷ்ணசாமி

அதையடுத்து தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, "பதினைந்து வருடம் தென் சென்னை மாவட்ட செயலாளராகவும், மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய அன்பழகன் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அவர் திமுக தலைமையின் நம்பிக்கைக்குரிய தளபதியாக செயல்பட்டு வந்தவர்.

அவரது இறுதி காலத்தில் கூட கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வாரி வழங்கியவர். இவரது இறப்பு மிகுந்த வேதனையை தருகிறது. அவரது மறைவால் வாடும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும், அவரது கட்சியினருக்கும், குடும்பத்தாருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க:திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் காலமானார்!

Last Updated : Jun 10, 2020, 3:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details