பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன் மற்றும் வானதி சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பு சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய துறைகளுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதனிடையே பேரவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெயரை, நேற்றைய முன்தினம் (ஏப்ரல் 11) அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்தியதை பேரவையில் இருந்து நீக்கச் சொல்லிய நிலையில், அதனை பேரவையின் தலைவர் நீக்காத காரணத்தால் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று(ஏப்ரல் 13) வெளிநடப்பு செய்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், “நேற்றைய முன்தினம் சட்டமன்றத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டலாக சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அதனை நீக்கச்சொல்லி நேற்று தெரிவித்தோம். அதனை இன்றைக்கு எடுத்துக்கொள்கிறோம் என்று தெரிவித்த நிலையில், உதயநிதி தவறாகப் பேசவில்லை என்று பதிலைத் தந்து இருக்கிறார்கள்.
உதயநிதி சட்டமன்றத்தில் பேசும்போது, ஐபிஎல் கிரிக்கெட் டிக்கெட்டை மத்திய அமைச்சர் அமித்ஷா மகன் வைத்திருக்கிறார் என கிண்டலாகப் பேசியிருக்கிறார். இன்று இந்தியாவின் உள்துறை அமைச்சராகவும், இரும்பு மனிதராகவும் உள்ள அமித் ஷாவை, திரு என்றோ, மாண்புமிகு என்றோ சொல்லாமல், அமித் ஷா மகனிடம் இருக்கிறது என்று சொன்னதை நீக்க வேண்டும் என பேரவையில் தெரிவித்தோம். இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுந்து நின்று, ‘திரு’ என்று சேர்த்து இருக்கிறது, இதில் தவறு ஏதும் இல்லை என அறிவித்தார். நேற்றைய முன்தினம் பேசும்போது வார்த்தையில் கிண்டலும், கேலியும் இருந்தது.
தமிழ்நாடு கிரிக்கெட்டின் தலைவராக சிகாமணி பொன்முடி தான் இருக்கிறார். அவர் பெயரைச்சொல்லி இருக்கலாம். அமித் ஷா பெயரை சொன்னது வருத்தத்தை தந்தது. இதனை நீக்கச்சொல்லி நீக்காத காரணத்தால், நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், “கடந்த வாரத்தில் கோயம்புத்தூரில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருக்கிறது. 20 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் லாரி வருகிறது என்ற சூழலால், மக்கள் குடிநீர் பிரச்னையில் உள்ளனர். குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க உடனடியாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தக் குடிநீர் பிரச்னை கோயம்புத்தூர் மக்களை பெரிதும் பாதித்த காரணத்தால், பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தேன். இதுவரை இதனை பேரவைத் தலைவர் எடுத்துக் கொள்ளாமல் இருக்கிறார். ஏனென்றால், கோடை காலத்தில் கோயம்புத்தூர் மக்கள் குடிநீர் பிரச்னையால் பாதிக்கின்றபோது, இதைப் பற்றி அரசாங்கத்திற்கு கவனத்தை ஈர்த்து, லாரிகள் மூலம் குடிநீர் வழங்க சொல்லக் கேட்கிறோம். ஆனால், மக்கள் பிரச்னையைக் கேட்கக் கூட அனுமதி வழங்கப்படவில்லை.
மேலும் இது எங்களுக்கு வருத்தத்தை அளித்த காரணத்தால், நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம். அதேபோல பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஐபிஎல் கிரிக்கெட் டிக்கெட் தொடர்பாக அமைச்சர் அமித் ஷா பெயரைத் தேவையில்லாமல் பேசி இருக்கிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மற்றொரு அமைச்சரின் மகன்தான் தமிழ்நாடு கிரிக்கெட்டின் தலைவராக இருப்பதை மறந்து இருக்கிறார். மேலும் பேரவையில் இதே மாதிரி மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள், இவர்களது பெயரை பேசத் தெரியாதா?
இது பற்றி கேட்டதற்கு முதலமைச்சரும் அதனை நியாயப்படுத்துகிறார். மகன் என்பதால், அவர் செய்கின்ற தவறு தெரியவில்லை. இவையெல்லாம் மக்களுக்குத் தெரியாது என்று நினைத்து இருக்கிறார்கள். அதனால், வளர வேண்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். முதலமைச்சர், உதயநிதி ஸ்டாலினின் தவற்றைக் கண்டிக்க வேண்டும். தவிர, தவறை நியாயப்படுத்தக் கூடாது. இதன் காரணமாகவும் வெளிநடப்பு செய்துள்ளோம்” எனக் கூறினார்.
இதையும் படிங்க:ஐபிஎல் மேட்ச்க்கு பாஸ் கேட்ட எஸ்.பி.வேலுமணி.. அமைச்சர் உதயநிதி கூறிய பதில் என்ன?