கட்சி விரோத செயலில் ஈடுபட்டதாக அதிமுக கொறடா ராஜேந்திரனால் கடந்த வாரம் சபாநாயகரிடம் புகார் அளிக்கப்பட்ட தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ரத்தின சபாபதி ,கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவருக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.
இது குறித்து டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ ரத்தின சபாபதி ஈடிவி பாரத் செய்திக்காக பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "விளக்கம் கேட்டு சபாநாயகர் எனக்கு இரண்டாம் தேதி அன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார். விளக்கத்தை படித்து சட்ட ஆலோசகர்கள் உடன் கலந்து பேசி கொடுத்த கால கெடுவுக்குள் சபாநாயகரிடம் விளக்கம் அளிப்போம். சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அவர் மீது குற்றம் இல்லை என்பதை அவர் நிரூபித்து விட்டு பின்னர் சபாநாயகராக இருக்கலாம் என்பதுதான் சட்டம். வழக்கு நீதி மன்றத்தில் இருக்கிறது. தீர்ப்பு வரும்வரை காத்து இருப்போம்" என்றார்.
ரத்தின சபாபதி பிரத்யேக பேட்டி தொடர்ந்து பேசிய அவர், "தினகரன் கட்சியில் நாங்கள் இல்லை. நானும் அவரும் நாற்பது வருட காலமாக நண்பர். கட்சியில் ஒன்றாக பணியாற்றி இருக்கின்றோம். இன்று அவர் கட்சியில் நான் உறுப்பினாராக கூட இல்லை என்று அவரே சொல்லி விட்டார். சசிகலாவுடைய அணியில் இருந்தது உண்மை. பொதுவாழ்க்கையில் பல்வேறு போராட்டங்களை சந்தித்து உள்ளேன். நான் போராடுவதெல்லாம் கட்சி பிரியக்கூடாது என்பதற்காகத்தான். நான் ஒன்றும் பாஜகவிலோ, திமுகவிலோ போய் சேரவில்லை. அதிமுக கட்சி இரண்டாக பிரிந்து உள்ளது. அதை ஒன்று சேர்ப்பதுதான் எங்கள் விருப்பம்.
ஒன்று சேர்ந்தால்தான் மிகப் பெரிய வெற்றியை அடைய முடியும். 23ஆம் தேதி அன்று மக்கள் நோட்டீஸ் விடப்போகிறர்கள். அது யாருக்கென்பதை பொறுத்திருந்து பார்ப்போம். சபாநாயகர் மூத்த தலைவர். சட்டமன்றத்திற்குள் ஓபிஎஸ் தலைமையில் பத்து பேருடன் வெளியேறியபோது அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார். இதற்கு காலம் பதில் சொல்லும்" என்று தெரிவித்தார்.