தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்களுக்கு அதிமுக பதில் சொல்லவேண்டும்- மு.க.ஸ்டாலின்! - விளம்பரங்கள்

சென்னை : வெளிநாடு சுற்றுப் பயணம் சென்று திரும்பியிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சியில் பெறப்பட்டுள்ள முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டு இரண்டு நாட்களில் தமிழ்நாடு மக்களுக்குப் பதில் சொல்லியாக வேண்டும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு கேள்வியெழுப்பிய மு.க.ஸ்டாலின்.

By

Published : Sep 10, 2019, 5:35 PM IST

Updated : Sep 11, 2019, 2:32 PM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வெளிநாடுகளின் முதலீடுகளைப் பெறப் போகிறோம் என்று சொல்லி வீராப்புடன் சென்று வெறுங்கையுடன் திரும்பியிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பயணம் மன ரீதியாக ஏற்படுத்தியுள்ள கோணலால், விரக்தியின் உச்சத்திற்கே சென்று, “ஸ்டாலின் தான் நினைத்ததை நடத்த முடியாத காரணத்தால் என் மீது எரிச்சலும், பொறாமையும் கொண்டு பேசி வருகிறார்” எனப் பேட்டியளித்திருப்பது, “பாடத் தெரியாமல் பக்க வாத்தியத்தில் குறை” கூறியது போன்ற பைத்தியக்காரத்தனமானது.

பதிமூன்று நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு வந்திருக்கும் முதலமைச்சருக்கு, 'கட்சி நிதியிலிருந்து கொடுப்பதுபோல் விளம்பரங்களை அரசு நிதியிலிருந்து கொடுத்திருந்ததைப் பார்த்த மயக்கத்தில் என் மீது பாய்ந்திருக்கிறார். அரசுப் பணத்தில் இத்தகைய விளம்பரங்களை வெளியிடுவது நிதி ஒழுங்கீனம் என்பதை உடன் சென்ற தலைமைச் செயலாளர் உணர்த்தியிருக்க வேண்டும்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்


அவருடன் சென்ற தலைமைச் செயலாளரே துபாயில், தி.மு.க. ஆட்சியில் கிடைத்த அந்நிய முதலீடுகளையும் சேர்த்து அங்குள்ள தொழிலதிபர்களிடம் தமிழ்நாட்டின் பெருமையைச் சுட்டிக்காட்டி முதலீடு கோரியிருக்கின்ற நிலையிலும், பக்கத்தில் இருந்த பழனிசாமிக்கு தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு கண்ட தொழில் வளர்ச்சி தெரியாமலும், புரியாமலும் விமான நிலையத்தில் பேட்டி அளித்திருக்கிறார்.

தி.மு.க. ஆட்சியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இரண்டு முறை நடத்தாமல், 'விளம்பர மேளா' இல்லாமல், இதுபோன்று அரை டஜன் அமைச்சர்களும், முதலமைச்சரும், ரத கஜ துரக பதாதிகளுடன் படையெடுத்துச் செல்லாமல், தமிழ்நாடு முதலீட்டுக்குத் தக்க இடம் என்றிருந்ததால், தானாக வந்த முதலீடுகளால், இன்றைக்கு தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலும், அம்பத்தூர் முதல் காஞ்சிபுரம் வரையிலும் தொழிற்சாலைகள் அணி வகுத்து நிற்கின்றன.

தி.மு.க. ஆட்சியில் 2006 முதல் 2010 மார்ச் வரை மட்டும் 46,091 கோடி ரூபாய் அந்நிய முதலீடுகள் பெறப்பட்டு 2.21 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டது. இவையெல்லாம், இரு கைகள், இரு கால்கள் என நான்கு கால்களால் தவழ்ந்து சென்று, முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவில்லை என்பது பரிதாபம்தான்!

எடப்பாடி பழனிச்சாமிக்கு கேள்வியெழுப்பிய மு.க.ஸ்டாலின்.

2015ல் நடந்த முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை காணவில்லை, கானல் நீராகிப் போனது! 2019ல் நடைபெற்ற இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கதி என்னவென்றே தெரியவில்லை; காற்றில் கறைந்து விட்டதோ?. இப்போது போட்டுள்ளதாகக் கூறப்படும் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கதி என்ன ஆகுமோ என்றும் தெரியவில்லை.

ஆகவே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இருந்தால், "அ.தி.மு.க ஆட்சியில் இதுவரை போடப்பட்டுள்ள 443 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி, எத்தனைக் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன; அந்த முதலீடுகள் மூலம் தொடங்கப்பட்டு, செயல்படும் தொழிற் நிறுவனங்கள் எத்தனை, அந்நிறுவனங்கள் மூலம் எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கித்தரப்பட்டன என்பதையெல்லாம் விரிவான வெள்ளை அறிக்கையாக உருவாக்கி, இதோ பிடியுங்கள் நீங்கள் கேட்கும் வெள்ளை அறிக்கை" என்று வெளியிடத் தயாரா?

அவ்வாறு, உண்மைகளை வெளியிட்ட ஒரு வாரத்தில் முதலமைச்சருக்கு தி.மு.க. சார்பில் 'பாராட்டு விழா' நடத்தத் தயாராக இருக்கிறேன். என் சவாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொள்ளத் தயாரா? இரண்டு நாட்களில் தமிழ்நாடு மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும்; இல்லாவிட்டால், முதலமைச்சரின் வெளிநாடுகள் பயணம் மர்மங்கள் நிறைந்தது என்று ஊர் முழுவதும் பேசிக் கொள்வது உண்மைதான் என்று உறுதியாகிவிடும்.

சிலரை பலநாள் ஏமாற்றலாம்; பலரைச் சிலநாள் ஏமாற்றலாம், எல்லோரையும் எல்லா நாட்களும் ஏமாற்றிவிட முடியாது என்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

Last Updated : Sep 11, 2019, 2:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details