இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், “அதிவிரைவாகச் செல்லும் வாகனங்களின் பதிவு எண்களைக் கண்காணிக்கும் கேமரா” அமைப்பதற்கு, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை வெளியிட்ட டெண்டர் அறிவிப்பு, பத்து முறைக்கு மேல் திறக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
செங்கல்பட்டு முதல் திருச்சி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில், இந்தக் கண்காணிப்புக் கேமராக்களை அமைக்க, 28.8.2019 அன்று டெண்டர் விடப்பட்டது. அந்த டெண்டரைத் திறப்பதற்கு முந்தையக் கூட்டத்தில் (Pre Bid Meeting), பல்வேறு திருத்தங்களைச் செய்து - டெண்டர் பிற்சேர்க்கை வெளியிடப்பட்டுள்ளது. புதிதாகத் திருத்தப்பட்ட நிபந்தனைகள் அனைத்தும் முறைகேடுகளுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் வகையில் அமைந்துள்ளன. 25 கோடி ரூபாயாக இருந்த டெண்டர் மதிப்பு, இந்தத் திருத்தங்கள் மூலம் 900 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்காணிப்பது மக்களின் உயிர்ப் பாதுகாப்புடன் தொடர்புடையது. மக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கி, டெண்டரில் பணம் கொள்ளையடிக்கும் தீய செயலில் அமைச்சர்களோ, அலுவலர்களோ ஈடுபடக் கூடாது. அதிமுக ஆட்சியில் டெண்டர் நிபந்தனைகளை திடீர் திடீரென மாற்றுவது; ஆன்லைன் டெண்டர் என்று மோசடி செய்வது எல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது.