இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி) 259 GET (Graduate Executive Trainee) பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில், வெளிமாநில தேர்வு மையங்களில் எழுதியவர்களில் 99 விழுக்காட்டினர் தேர்வு பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு தேர்வு மையங்களில் எழுதியவர்களில் ஒரு விழுகாட்டினர் மட்டுமே வெற்றி பெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இந்தப் பாரப்பட்சமான தேர்வு முறைக்குத் திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக தேர்வு பெற்றுள்ள 1582 பேரில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வெறும் 8 பேர் மட்டுமே என்பது வெளி மாநிலத் தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வின் நம்பகத்தன்மை மீது மிகப்பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
என்.எல்.சி.யில் அப்ரென்டீஸ் பயிற்சி முடித்தவர்கள், இறந்தோர் வாரிசுகள், என்.எல்.சி. நிறுவனத்திற்கு வீடு நிலம் கொடுத்தவர்கள் என ஆயிரக்கணக்கான பேருக்கு இன்னும் வேலை வாய்ப்புகள் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்புகளையும் வெளிமாநிலத்தில் உள்ளவர்களுக்குத் தாரைவார்க்கும் மத்திய பாஜக அரசின் போக்கு மிகுந்த வருத்தத்திற்குரியது.
வட மாநிலத்தவருக்கே ஒப்பந்தப் பணிகள் வழங்கப்படுவதால், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஒப்பந்தத் தொழிலாளர் பணிகள் கிடைப்பதும் அரிதாகி வரும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் - இதுபோன்ற தேர்வுகள் மூலமும் அநீதி இழைக்கப்படுகிறது. இது குறித்து பத்தாண்டுக்கால அதிமுக அரசு குறிப்பாக இந்த நான்காண்டு காலத்தில் உள்ள முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அரசு தமிழ்நாடு இளைஞர்களுக்கு வேலை இழப்பு திட்டமிட்டு ஏற்படுத்தப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
எனவே, என்.எல்.சி.யில் நடைபெற்றுள்ள இந்த GET Graduate Executive Trainee தேர்வை உடனடியாக ரத்து செய்து, வெளிமாநிலத் தேர்வு மையங்களில் நடைபெற்றுள்ள தேர்வில் 99 விழுகாட்டினர் வெளிமாநிலத்தவரே தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி உள்ளிட்ட மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாடு இளைஞர்களுக்கே வேலைவாய்ப்புக் கிடைத்திடுவதை மத்திய பாஜக அரசு உறுதி செய்திட வேண்டும்.
முதலமைச்சர் பழனிசாமி இது தொடர்பாக உடனடியாக மத்திய அரசுடன் பேசி, தேர்வை ரத்து செய்து - தமிழ்நாட்டிலேயே தேர்வு மையங்களை அமைத்து அந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்திட வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாடு இளைஞர்களின் வேலைவாய்ப்பைத் திட்டமிட்டுப் பறித்துள்ள இந்தத் தேர்வு ரத்து செய்யப்படவில்லையென்றால் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட திமுக சார்பில் மாபெரும் போராட்டம் விரைவில் நடத்தப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அரசாங்கம் கிராம சபையை கூட்டாததால் நாங்கள் கூட்டுகிறோம் - ஸ்டாலின்