சென்னை:தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு நடுவே தீராத நீண்ட கால பிரச்னையாக காவிரி விவகாரம் (Mekedatu Dam Issue) உள்ளது. நதிநீர் பங்கீட்டில் தொடர் பிரச்னைகள் இருந்த போதிலும், மழை செழிப்பாக இருக்கும் ஆண்டுகளில் காவிரி கரைகொள்ளாமல் ஓடி வந்து தமிழ்நாட்டை அணைத்துக் கொள்வாள்.
ஏய்க்கும் பருவமழை வறளும் காவிரி: ஆனால், வறட்சி ஆண்டுகளில் தமிழ்நாட்டு விவசாயிகளின் கண்களின் கண்ணீர் தான் பெருகும், காவிரி அல்ல. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாகவே கேரளாவின் சில பகுதிகளில் துவங்கிய நிலையில், தமிழ்நாட்டில் ஒகேனக்கல் அருவிப்பகுதி வறண்டு காணப்படுகிறது. பிலிகுண்டுலுவிலிருந்து ஒகேன்னக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு செல்லும் காவிரியாற்றில் நீர்வரத்து 700 அடியாக குறைந்துள்ளது. இதனால், பரந்து விரிந்த காவிரி சுருங்கி ஓடைபோல காட்சியளிக்கிறது.
என்ன சொல்கிறது கர்நாடகா?: கடந்த ஜூன் 20ஆம் தேதி, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்துக்கு, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் எழுதியிருந்த கடிதத்தில், தமிழ்நாட்டில் இரண்டாம் ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் என பல்வேறு குடிநீர் திட்டங்கள் சட்டவிரோதமாக செயல்படுவதாகவும், அத்திட்டங்களை தமிழ்நாடு அரசு நியாயப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.
மேலும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு இரட்டை வேடம் போடுவதாகவும் டி.கே.சிவகுமார் தெரிவித்திருந்தார். இதனிடையே, காவிரியாற்றில் நீர்வரத்து குறைந்து ஆங்காங்கே பாறைகளாக காட்சியளித்து வரும் நிலையில், தமிழ்நாட்டிற்கு காவிரி ஆற்றிலிருந்து தண்ணீர் திறந்து விடமுடியாது என்று அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.