வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பரப்புரைகளில் அதிமுக, திமுக, நாதக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன.
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் அக்கட்சியின் தொண்டர்களுக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், வேலூர் கோட்டையை வெற்றிக் கோட்டையாக்கிட உத்வேகத்துடன் உழைத்திட வேண்டும் என்றும், ஆக. 5 வரை ஆர்வம் சிறக்க அயராது பணியாற்றி, வெற்றிக் கனியைப் பறித்து, கருணாநிதியின் திருவடியில் காணிக்கை ஆக்கிடுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரம் அவர்களிடம் இருந்தாலும், மக்கள் நம் பக்கமே இருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், மக்களின் பேரன்பையும் பேராதரவையும் பெறுவது ஒன்றே நமக்கான முதன்மைப் பணி எனவும் தன் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், மத்தியிலும், மாநிலத்திலும் ஆளுவோர் செய்த சதியால் ஏற்கனவே வேலூர் தேர்தல் நிறுத்தப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ள அவர், தமிழ்நாட்டின் உரிமைகளையும் இந்திய ஜனநாயகத்தையும் பாதுகாத்திடும் பணியை தொடர்ந்து வலிமையுடனும் வாய்மையுடனும் மேற்கொள்ள உத்வேகத்துடன் உழைத்திடுவீர் எனவும் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.