தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் வேண்டும்' - கடிதத்தில் வலியுறுத்திய ஸ்டாலின்! - dmk chief mk stalin

சென்னை: கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

dmk

By

Published : Sep 24, 2019, 10:49 AM IST

கீழடி விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், 'தமிழர்களின் சங்க காலம் 2,600 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்கிற அரிய கண்டுபிடிப்பானது, கலாசார வரலாற்றில், மிகப்பெரும் திருப்புமுனை என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. தமிழக தொல்லியல் துறை, 'கீழடி - வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்' என்றத் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை, தமிழ் எழுத்து வடிவங்கள் கி.மு.6ஆம் நூற்றாண்டிலேயே இருந்துள்ளது என்பதற்கு உரிய சாட்சியமாக அமைந்துள்ளது.

கீழடியில் நடைபெற்ற நான்காம் கட்ட அகழ்வாய்வில், தமிழர்கள் இலக்கியத்திலும் எழுத்துக் கலையிலும் 2,600 ஆண்டுகளுக்கு முன்னரே வல்லவர்களாகத் திகழ்ந்துள்ளனர் என்பது, மறுக்கமுடியாத சான்றாகத் தெரிய வந்துள்ளது. பழங்கால தமிழர் நாகரிகம் என்பது, உலகின் மிகப் பழமையான நாகரிகம் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், அதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் இது உள்ளது. அத்துடன் இந்திய வரலாற்றையே, இனி தமிழர்கள் வரலாற்றிலிருந்து தான், முன்னோக்கிப் பார்க்க வேண்டும் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.

MK Stalin

கீழடியில், நான்காவது முறையாக நடத்தப்பட்ட அகழ்வாய்வின் கண்டுபிடிப்புகள், கரிம மாதிரிகள் உள்ளிட்டவைகள் அமெரிக்காவிலும், இத்தாலியிலும் உள்ள புகழ் வாய்ந்த சோதனைக்கூடங்களில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வில், வேளாண் தொழில்களில் காளைகள் - மிருகங்களை, தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. ஜல்லிக்கட்டுப் போன்ற தமிழர்களின் கலாசார பாரம்பரிய நிகழ்வுகள், வேளாண் சமூக அமைப்புகள் அப்போதே இருந்து வந்துள்ளதற்கான தேவையான அனைத்துச் சான்றுகளும், அந்த அகழாய்வின் கண்டுபிடிப்பில் இருந்ததாகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப் பட்டவைகளை வைப்பதற்காக, உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். இது குறித்து மாநிலங்களவையிலும், தற்போது மக்களவையிலும், நாடாளுமன்ற திமுக துணைத் தலைவர் கனிமொழியும், நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார். கீழடிக்குப் பிறகு அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட உத்தரப்பிரதேச மாநிலம் சனோவ்லி என்கிற இடம் பாதுகாக்கப்பட்ட இடமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதைப்போல கீழடி அகழாய்வுப் பகுதியையும் பாதுகாக்கப்பட்ட இடமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

அமைச்சருடன் தமிழ்நாடு எம்.பி.க்கள்

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டு வரும், வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, ஏற்கெனவே இருக்கும் சென்னை மண்டல அலுவலகத்துடன் தென் தமிழகத்திற்காக, மதுரையிலும், தொல்லியல் துறை அலுவலகம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். கீழடியில், அகழாய்வுப் பணிகள் துவக்கப்பட்ட அதே கால கட்டத்தில், குஜராத் மாநிலம் வாட் நகரிலும் அகழாய்வுப் பணி தொடங்கப்பட்ட நிலையில், அங்கு அருங்காட்சியகம் அமைக்கப்பட திட்டமிட்டுள்ளதைப் போல, கீழடியிலும் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொன்மையானப் பொருட்களை, பார்வைக்கு வைக்க அருங்காட்சியகம் ஒன்று அமைக்க வேண்டும் என்றும், நான் கேட்டுக் கொள்கிறேன்.

எனவே கீழடியைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் மீண்டும் நான் வலியுறுத்துகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதத்தை மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை இணை அமைச்சர் (தனிபொறுப்பு) பிரகலாத் சிங் பாட்டீலிடம் திமுக எம்.பி கனிமொழி, காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், மார்க்சிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன் ஆகியோர் நேரில் வழங்கினர்.

இதையும் படிங்க:5ஆம் கட்ட கீழடி அகழாய்வு - நூலாக வெளியிட்ட தமிழ்நாடு தொல்லியல் துறை

ABOUT THE AUTHOR

...view details