சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மகளிர் அணி நடத்தும் ‘மகளிர் உரிமை மாநாட்டில்’ கலந்து கொள்ள சென்னை வந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை விமான நிலையத்திற்குச் சென்று முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்றார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மகளிரணி சார்பில், ‘மகளிர் உரிமை மாநாடு’ இன்று (அக்.14) நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. மேலும், மாநாடு நடைபெறும் இடத்தில் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதனைத் தொடர்ந்து, மாநாடு பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இந்த மாநாட்டையொட்டி ஒய்.எம்.சி.ஏ. திடலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னை வந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை விமான நிலையத்திற்குச் சென்று முதலமைச்சர் ஸ்டாலின், அவர்களுக்கு புத்தகம் வழங்கி வரவேற்றார்.