இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”விவசாயிகளின் மேம்பாட்டிற்காகவும், தமிழ்நாட்டின் வேளாண் தொழில் வளர்ச்சிக்காகவும், ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் முன்னோடியாகத் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், தமிழ்நாட்டில் தொலைநோக்குத் திட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டன.
ஆனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று அறிவித்துவிட்டு, பின்னர் தூர் வாரும் பணிகளை ஆளும் அரசு அறிவித்துள்ளது. அதற்குரிய நீர் இருப்பு அணையில் இருக்கிறது என்பது முன்கூட்டியே தெரிந்தும், பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ள முதலமைச்சர் இதுகுறித்து எவ்வித கவலையும் கொள்ளாமல் உள்ளார்.
இந்நிலையில் காவிரி டெல்டா பகுதி வேளாண்மைக்கான நீர்ப்பாசனத்திற்கு மிக முக்கியமான கால்வாய் தூர் வாரும் பணிகளை அறிவித்து, அந்தப் பணிகளைக் கண்காணிக்கச் சிறப்பு அலுவலர்களையும் நியமித்துள்ளனர். அணை திறக்க இன்னும் 18 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள கால்வாய்கள் அனைத்தையும் தூர்வாரி விடுவார்களா? மேட்டூரில் ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படும் நீர் கடைமடைப் பகுதிக்கும் சென்றடையுமா என்பதெல்லாம் மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது.