கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், "கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைப் பார்க்கும்போது, தமிழ்நாடு இரண்டாவது நிலையில் இருந்து மூன்றாவது நிலைக்குச் சென்றுவிடுமோ என்ற ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. அப்படி ஆகிவிடாமல் தடுத்தாக வேண்டும்.
நிலைமை தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்தபோதும், போதிய தடுப்பு நடவடிக்கைகள் விரைவாகவும் முழுமையானதாகவும் எடுக்கப்பட்டதா என்ற ஐயப்பாடு பெரும்பாலானோர் மனங்களிலிருந்து அகன்றபாடில்லை. சோதனை செய்வதற்கான ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ கொள்முதலில் ஏற்பட்டுள்ள தாமதம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். மாநில அரசே முன்னின்று எடுக்க வேண்டிய கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குக் கூட மத்திய அரசின் கண் அசைவிற்காகக் காத்திருக்கும் அவல நிலைமையை இந்த அரசுக்கு ஏற்படுத்தியிருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது.
ஒரே தேசம் - ஒரே கரோனா - ஒரே கொள்முதல் என்ற எண்ணம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. இதனால் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் மேலும் தாமதமாகி வருகிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. நோய்த் தொற்று குறித்த சோதனையை விரைவுபடுத்துவதுடன், அதை தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் இலவசமாகச் செய்திட வழிவகை செய்திட வேண்டும்.
தமிழ்நாட்டிலும் ஊரடங்கு குறித்து உரிய முடிவினை காலதாமதம் செய்யாமல் எடுத்து, மக்களின் மனநிலையைத் தயாரித்திட முன்கூட்டியே அறிவித்திட வேண்டும். ஊரடங்கினால் ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், சிறு, குறு வணிகர்கள், மாற்றுத்திறனாளிகள், வெளிமாநிலத் தொழிலாளர்கள், வீடில்லாதோர் உள்ளிட்ட சமூகத்தின் விளிம்பு நிலை மக்கள் அனைவருக்குமான வாழ்வாதாரத்தை, உயிர் வாழ்வதற்குத் தேவையானவற்றை உறுதி செய்திட வேண்டும்.
மேலும் பாதிப்புக்குட்பட்டிருக்கும் பெரும்பான்மை மக்களுக்கு சிறப்பு நிவாரணத் தொகுப்பினை இதுவரை அறிவிக்கவில்லை. குறைந்தபட்சம் ரூ.5000 ரொக்கம், மற்றும் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை இலவசமாக வழங்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.