'அரசாங்க இயந்திரம் முழுமையாகச் செயல்படவில்லை, ராணுவ உதவியை விரைந்து பெற்றிருக்க வேண்டும்'என்ற தனது ஆதங்கத்தை முதலமைச்சர் தவறாகப் புரிந்து கொண்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில்,
- எனது ஆதங்கத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை; தாங்கிக் கொள்ளவும் இயலவில்லை.
- எல்லாவற்றிலும் நாங்கள் சரியாகத்தான் செயல்பட்டோம் என்று சொல்வதோடு நிறுத்திக் கொண்டிருக்கலாம். ஆனால் அவர், 'அரசு செயல்பாட்டில் தொய்வு இருந்ததாக தவறான குற்றச்சாட்டை ஸ்டாலின் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். அவர் என்ன விஞ்ஞானியா? அரசியல் காழ்ப்புணர்ச்சியில் பேசுகிறார், மனசாட்சியுடன் பேச வேண்டும்' என்று சோகமான நிகழ்வில், சவால் விட்டுக் கொக்கரித்திருக்கிறார்.
- தன்னுடைய அரசாங்கத்தின் அலட்சியமும் அக்கறையின்மையும் வெளிச்சத்திற்கு வந்துவிட்டதே என்ற ஆத்திரத்தில், என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல், முதலமைச்சர் ஏதேதோ பேசியிருக்கிறார். கேள்வி கேட்ட நிருபர்கள்மீது சினத்துடன் பாய்ந்திருக்கிறார்.
- சுஜித் மரணத்தில் இருந்து எந்தப் பாடத்தையும் எடப்பாடி பழனிச்சாமி கற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்பதைத்தான் அவரது பேட்டி காட்டுகிறது.
- சில நாட்களுக்கு முன்பு, சுபஶ்ரீ என்ற இளம்பெண்ணை கட்அவுட்டுக்குப் பலி கொடுத்தோம். அதன்பிறகும் நீதிமன்றத்துக்குப் போய் கட்அவுட் வைக்க அனுமதி வாங்கியவர் எடப்பாடி பழனிசாமி.
- இதுவரை நீட் தேர்வின் கொடுமை காரணமாக ஏழு உயிர்கள் தற்கொலை செய்துகொண்ட சோகம் நிகழ்ந்திருக்கிறது. அதன்பிறகும் நீட் தேர்வைத் தடுக்க முடியாதவர்தான் எடப்பாடி பழனிசாமி.
- 13 பேரைச் சுட்டுக் கொன்றுவிட்டும், ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு நிரந்தரத் தடை ஏற்படுத்த அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றாதவர் எடப்பாடி பழனிசாமி.
- இந்த ஆணவப் பேச்சுகளை எடப்பாடி பழனிசாமி தவிர்க்கப் பழகிக்கொள்ள வேண்டும். ஏட்டிக்குப் போட்டி என்று போனால், எதற்கும் பயன்படாது என்பதை உணர வேண்டும். இது அறிவுரை அல்ல; முதல்வருக்கு எனது அன்பு வேண்டுகோள்! இவ்வாறு ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.