தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் வெள்ளை போர்ட் கொண்ட சாதாரண பேருந்துகளில், மகளிர் இலவசமாக பயணம் செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில், மகளிருக்கு வழங்கியது போலவே திருநங்கைகளுக்கும் இலவச பயண சலுகை வழங்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துவந்தனர்.
இதுதொடர்பாக பத்திரிக்கையாளர் ஒருவர் ட்விட்டரில், மகளிருக்கு இலவச பயண சலுகை வழங்கியது போல, திருநங்கைகளுக்கும் இலவச பயண சலுகை வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தார்.
மு.க ஸ்டாலின் ட்விட்டர் பதிவு இதற்கு பதிலளித்த அவர், "பெண்களைப் போலவே திருநங்கைகளும் கட்டணமின்றி அரசுப் பேருந்துகளில் பயணிப்பது குறித்து பரிசீலித்து உரிய முடிவு எடுக்கப்படும். இதனை தனது கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி. மகளிர் உரிமைகள் மற்றும் நலனுடன், திருநங்கையர் நலனையும் சேர்த்து சிந்திப்பதே திமுக அரசின் வழக்கம்." என்றும் தெரிவித்திருந்தார்.