தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நோக்கம் நிறைவேறாமல் ஆதிதிராவிடர் பள்ளியை இணைப்பதா? - கல்வியாளர்கள் எதிர்ப்பு - பழங்குடியினர் நலத்துறை

தமிழ்நாட்டில் பிற துறைகளின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளை ஒருங்கிணைத்து பள்ளிக்கல்வித்துறையில் இணைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக பட்டியலின பள்ளிகள் அதன் நோக்கம் நிறைவேறாமல் இணைக்க கூடாது என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

CM form a experienced experts panel and seek opinion before merging other departments schools with school education department
துவக்கப்பட்டத்தின் நோக்கம் நிறைவேறாமல் பட்டயலினப் பள்ளிகளை இணைப்பதா

By

Published : Mar 30, 2023, 1:04 PM IST

1

சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின் போது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மாநகராட்சிப் பள்ளிகளையும் இதனுடன் இணைக்க வேண்டும் என்ற கருத்துகள் கூறப்படுகிறது. ஆனால் பட்டியலினப் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையில் இணைப்பதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்தப் பள்ளிகள் துவக்கப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறாமல் இணைக்க கூடாது எனவும், வல்லுநர் குழுவை அமைத்து கருத்துகளை கேட்டறிந்தப் பின்னர் இது குறித்து முடிவு எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.

இது குறித்து பொதுப்பள்ளிகான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறும்போது, "சாதி ஒழிய வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. இந்திய அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 17 தீண்டாமை ஒழிந்து விட்டது என கூறிய உடனே சாதியும் ஒழிந்து விட்டது என்பது தான். ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை மற்றும் பிறத்துறைகளின் கீழ் இயங்கக்கூடிய பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வருவதால் மட்டுமே சாதியை ஒழித்து விட்டோம் என சொல்ல முடியாது.

அதேபோல ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இருக்கக் கூடிய பள்ளிகள் திறம்பட செயல்படவில்லை. அதனை வருவாய்த்துறை அதிகாரிகள் நிர்வகிக்கின்றனர். எனவே பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டால் சிறப்பாக செயல்படும் என்றால், தற்பொழுது பள்ளிக்கல்வித்துறைக்கு தலைவராக ஆணையர் பதவியாக மாற்றி ஐஏஎஸ் அதிகாரித் தான் இருக்கிறார். ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கு மாறுவர். பள்ளிக்கல்வித்துறைக்கு கல்வியில் தொடர்பு உள்ளவர்களை ஐஏஎஸ் அதிகாரிகளாக போடுவதில்லை.

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வந்துவிட்டால் நிர்வாகத்திறமை வந்துவிடும். இன்னொரு துறைக்கு கீழ் செயல்படுவதால் நிர்வாகத்திறமை கிடையாது என சொல்லப்படும் வாதம் நியாயமற்றது. இந்தப் பள்ளிகள் எந்த நோக்கத்திற்காக திறக்கப்பட்டதாே அதன் நோக்கமும், சிக்கல்களும் தீர்க்கப்பட்டு விட்டதா? சாதிய ரீதியான வன்கொடுமைகள் நடைபெறும் சமூக கட்டமைப்பில் வெறும் ஆதிதிராவிடர் என்பதை மட்டும் மாற்றி விட்டு பள்ளிக்கல்வித்துறையுடன் கொண்டு வந்தால் எல்லாம் தீர்ந்துவிடும் என சொல்வது மேட்டுக்குடி தனமாக மேம்பாேக்காக பார்க்கப்படுவதாக கருதுகிறோம்.

சாதியை ஒழிப்பதற்கான ஒரு செயல்திட்டத்தோடு எல்லோருக்கும் கல்வியை கொடுக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை இத்தகைய நடவடிக்கையில் ஈடுப்பட்டால் பயனுள்ளதாக இருக்கும். இந்த வகையில் செய்திருக்கும் அறிவிப்பு நியாயமான அறிவிப்பாக பார்க்கவில்லை. பள்ளிக்கல்வித்துறை சிறப்பாக செயல்படுவதாகவும், எல்லாப் பள்ளிகளிலும் எல்லா வசதிகளும் ஏற்படுத்தி விட்டோம் என கூறினால் ஏன் மாதிரிப் பள்ளிகளை துவக்குகின்றீர்கள்.

சிறந்த மாணவர்களை எப்படி தேர்ந்தெடுத்து, அடையாளம் காண்பீர்கள். சிறந்த ஆசிரியர்கள் மூலம் கல்வி கற்பிக்கப்படும் எனவும், அனைத்து போட்டித்தேர்விற்கும் தயராக முடியும் என கூறினால், பிற பள்ளிகளில் சிறப்பான ஆசிரியர்கள் கற்பிக்கவில்லையா? பிறத்துறையின் பள்ளிகளை இணைத்து விட்டு அந்த மாணவர்களை எங்கு சேர்க்கப்போகிறீர்கள். மாதிரிப்பள்ளிகளில் அனைத்து வசதிகளும் இருப்பதாகவும், போட்டித்தேர்வுகளில் பங்கேற்க முடியும் என அரசு கூறுகிறது. பள்ளிக்கல்வித்துறை ஆணையரகத்தின் கீழ் உள்ள பள்ளிகளிலேயே ஏன் பாகுபாடு காட்டுகின்றனர். இந்த பாகுபாடுகளை பள்ளிக்கல்வித்துறை வைத்துக் கொண்டு பிறத்துறை பள்ளிகளில் வசதிகள் இல்லை என்பதை நியாயமற்ற அணுகுமுறையாக பார்க்கிறேன்.

தேசியக்கல்விக்கொள்கை 2020 என்பது அரசுப்பள்ளிகளை தனியாரிடம் கொடுப்பதும், அதில் அரசு எதையும் செய்யாது என்பதும் தான். அரசாங்கம் பள்ளி, கல்லூரிகள் நடத்தவும், சாலை அமைக்கவும், கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான நிதி எல்ஐசி என்ற அமைப்பில் இருந்து நிதி வந்தது. ஆனால் எல்ஐசி என்ற அமைப்பையே பங்குச்சந்தையில் கொடுத்துவிட்டு, குற்றச்சாட்டிற்கு உள்ளான நிறுவனத்திற்கும் அளிக்கப்பட்டுள்ளது.

அதனால் எல்ஐசி நிறுவனத்தின் மூலம் வந்த பணம் மக்களின் செயல்பாட்டிற்கு வர முடியாது என கூறும்போது, மக்களுக்கான அடிப்படை வசதிக்கு நிதி கிடைக்காது. இனிமேல் தனவந்தர்களின் கல்வி நிறுவனங்களின் கீழ் படிக்க வேண்டும் என்ற நிலை வரும். ஆசிரியர்களை நியமிக்கும் போது நிரந்தர ஆசிரியர்களை போடாமல், தற்காலிக ஊழியர்களாக ஆசிரியர்களை நியமிப்பது எந்தவகையில் நியாயம்.

இவ்வளவு சிக்கல்களை நீங்கள் வைத்துக் கொண்டு இருக்கும் போது, பள்ளி வளாகத்திற்குள் அனைத்துப் பள்ளிகளையும் கொண்டு வருவது, பலவீனமான பள்ளிகளை தனியார் பள்ளிகளுடன் இணைத்து விடுவது என்ற தேசியக் கல்விக்கொள்கையையின் செயல் திட்டத்தை முன்னெடுத்து செல்வதற்கான வாயப்பாகத்தான் பயன்படுமே தவிர எந்தப்பிரிவு மக்களின் நன்மைக்காகவும் பயன்படப்போவதில்லை” என்றார்.

இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவர் செ. கு. தமிழரசன் கூறும்போது, ”ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைத்து விடலாம் என சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பார்த்தால் பள்ளிக்கல்வித்துறையுடன் இணைத்தால், மேம்பட்ட கல்வி சூழலை உருவாக்கலாம் என தோன்றும். ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளிகளில் வரலாற்றையும், பின்னணியையும், நோக்கத்தையும் தெரிந்துக் கொள்ளதவர்கள் எடுத்தேன் கவிழ்த்தேன் என அறிவித்துள்ளனர்.

இது எந்த வகையிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவசியமற்றது, தேவையற்றது. மறைமுகமாக அந்த மக்களின் ஆராேக்கியமான, சூழல்நிறைந்த கல்வியை கிடைக்காமல் திசை திருப்புவது. எனவே எங்களை பொறுத்தவரை இந்தத்துறையை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைப்பதை எதிர்கிறோம். கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம். இது குறித்து அனுபவம் வாய்ந்த வல்லுனர்கள், அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள், சமூக அமைப்புகள் போன்றவற்றின் கருத்துகளை தெரிந்து அதன் பிறகு ஆலோசித்து முதலமைச்சர் முடிவு எடுக்க வேண்டும்.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வல்லுனர் குழு யார், அந்த கூட்டம் எப்போது யார் தலைமையில் நடைபெற்றது என்பது குறித்து முதலில் வெள்ளை அறிக்கை தந்து தெளிவுப்படுத்த வேண்டும். ஆதிதிராவிடர் நலத்துறை கண்காணிப்பு குழுவிற்கு 6 மாதமாக அலுவலகமே இல்லை. தற்பொழுது தான் அவர்களுக்கான அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு பணிபுரிய முழு நேரப்பணியாளர்களும் இல்லை.

ஆதிதிராவிடர் நலக்குழு எத்தனைப்பகுதிகளுக்கு பயணம் செய்து, பள்ளிகளை ஆய்வு செய்தது. ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் ஆலோசனை செய்தது என்ற விபரம் எதுவுமே எனக்கே தெரியவில்லை. இந்தப் பணிகள் எப்போது நடந்தது என்பதே தெரியவில்லை. ஆதிதிராவிடர் பள்ளிகள் 1,400 இருக்கிறது. இந்தப்பள்ளிகள் எந்தப்பகுதியில் இருக்கிறது என்பதும், இதில் படிக்கும் மாணவர்களில் 99.99 சதவீதம் யார் என்பதற்கான பதில் கிடைத்தாலே தெளிவான விளக்கம் கிடைக்கும்.

தமிழ்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளில் எத்தனை தனியார் பள்ளிகள் சர்வதேசப்பள்ளிகள் துவக்கப்பட்டுள்ளது என்ற பட்டியலை கொடுங்கள் நான் பதில் கூறுகிறேன். தமிழ்நாட்டில் சமசீர்கல்விமுறை செயல்படுத்தப்படுகிறதா? தனியார் பள்ளிகளில் தொலைக்காட்சி வசதியுடன் கல்வி அளிக்கப்படுகிறது. ஆனால் பள்ளிகல்வித்துறை பள்ளிகளில் பெண் ஆசிரியர்களுக்கு கழிப்பறை இருகிறதா?

பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி ஆதிதிராவிடர் நலப்பள்ளிக்கு ஒதுக்கப்படுகிறதா? இந்தப்பள்ளிகளை நிர்வகிக்கும் அதிகாரிகள் பள்ளிக்கல்வித்துறைக்கு தொடர்ப்பு இல்லாதவர்களாக இருக்கின்றனர். ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகளை நிர்வகிப்பவர் கல்வித்துறை சம்பந்தப்பட்டவராக இருப்பதுடன், நிதியை அதிரித்து தர வேண்டும்” என கூறினார்.

இதையும் படிங்க: "சாத்தான்குளம் போல் எங்களுக்கும் நடந்துள்ளது" - பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் மல்க புகார்!

ABOUT THE AUTHOR

...view details