முதுநிலை மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், அதிமுகவும் மனுதாக்கல் செய்திருந்தன. அந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீடு அடிப்படை உரிமையல்ல என்ற கருத்தைத் தெரிவித்தது. மேலும், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தை நாடுமாறும் அறிவுறுத்தியது.
இந்நிலையில், பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவும், மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானும் ஓபிசி இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான கருத்தைத் தெரிவித்துள்ளனர். ”இடஒதுக்கீட்டுக் கொள்கையில் பிரதமர் நரேந்திர மோடியும், பாஜகவும் உறுதியாக இருக்கிறது. சமூகநீதியில் நாங்கள் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டைப் பிரிக்க முடியாது” என்று ஜே.பி. நட்டாவும், இடஒதுக்கீட்டுக் கொள்கைக்காக ஒத்த கருத்துடைய கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து வலியுறுத்த வேண்டும் என்று ராம் விலாஸ் பாஸ்வானும் கூறியிருந்தனர்.
இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் நன்றி தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ”இட ஒதுக்கீடு வழக்கு விசாரணையின்போது மத்திய அரசின் சார்பில் கருத்துக்களை உச்ச நீதிமன்றத்தில் எந்தவித ஐயப்பாட்டுக்கும் இடமின்றி தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். ஆனால் உச்ச நீதிமன்றத்தில் அமைதி காத்து விட்டு, இப்போது 'சமூகநீதிக் கொள்கை மீதான எங்கள் உறுதிப்பாட்டைப் பிரிக்க முடியாது' என்று பாஜக தேசியத் தலைவர் கூறியிருப்பது, சற்று வேறுபாடாகவும் வியப்பாகவும் இருக்கிறது.