இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்சி பலம், அதிகார பலம், காவல்துறை பலத்தைக் காண்பித்து கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காப்பாற்ற, கடந்த ஒருவாரமாக அதிமுக அரசு எடுத்த அனைத்து முயற்சிகளும் தவிடு பொடியாக்கப்பட்டுள்ளன.
ஜெயராஜ் குடும்பத்தின் வற்றாத கண்ணீர், தென்மாவட்ட மக்கள் வெகுண்டெழுந்து நடத்திய போராட்டம், நாடு முழுவதும் வணிகர் பெருமக்கள் ஒன்றுபட்டு நடத்திய கடையடைப்பு, உலகளாவிய மனித உரிமை ஆர்வலர்களின் முன்னெடுப்பு, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கொடுத்த அழுத்தங்கள், நீதிமன்றம் அடுத்தடுத்து பிறப்பித்த அரிய உத்தரவுகள், ஊடகங்களின் காட்சிகள் என அனைத்துப் பக்கங்களிலிருந்தும் அதிமுக அரசு சுற்றி வளைக்கப்பட்டு, தப்பிக்க முடியாமல் சட்டப் பொறியில் சிக்கிக் கொண்டது. இறுதியாகக் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரது கொலைகளுக்கும் காரணமான அனைவரது பெயர்களும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டும். அவர்கள் அனைவரும் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். ஒரு சிலரை மட்டும் கைது செய்து, ஒப்புக்கு கணக்குக் காட்டுவதாக இருக்கக் கூடாது. கண்துடைப்புக் கைதாக இது மாறிவிடக்கூடாது. நீதிமன்றமும் வழக்கின் தடம் மாற்றத்தை அனுமதிக்காது.
பென்னிக்ஸும் ஜெயராஜும் அடுத்தடுத்து மரணமடைந்த அடுத்த நாளே, முதலமைச்சர் விடுத்த அறிக்கையில் குற்றச் சம்பவத்தைத் திரையிட்டு மறைத்தார். பென்னிக்ஸ் மூச்சுத்திணறித்தான் இறந்தார் என்றும், ஜெயராஜ் உடல் நலமில்லாமல் இறந்தார் என்றும் அவராகவே தன்னிச்சையாக இறுதித் தீர்ப்பு எழுதினார்.