தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்ப் பண்பாட்டிற்கும், இந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஒரே எதிரி பாஜக - ஸ்டாலின் பதிலடி - DMK leader Stalin's statement

சென்னை: "ஆள்பிடிக்கும் அரசியலைத் தமிழ்நாட்டிலும்  நடத்த முயற்சிக்கும் பாஜக, தமிழ்நாட்டின் பண்பாட்டிற்கும், இந்திய தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கும், ஜனநாயக மாண்புகளுக்கும் நாட்டின் அரசியல் சட்டத்திற்கும் ஒரே எதிரி" என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

dmk stalin
dmk stalin

By

Published : Aug 24, 2020, 10:31 PM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று (ஆகஸ்ட் 24) காணொலி வாயிலாக நடந்த பாஜக-வின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக வளர்ச்சிக்கு எதிரான கட்சி என்றும், தேசிய உணர்வுக்கு எதிரான உணர்ச்சிகளைத் தூண்டி விட்டுச் சீர்குலைக்கப் பார்க்கிறது என்றும் அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறார்.

திமுக என்பது ஜனநாயக இயக்கம்; வளர்ச்சியிலும், தேச உணர்வுகளிலும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு, பாடுபட்டுவரும் இயக்கம். ஜனநாயக நெறிமுறைகளைப் பாதுகாத்து மக்களின் அடிப்படை சுதந்திரம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காகவே எமர்ஜென்சியை எதிர்த்து நின்று ஆட்சியையே விலையாகக் கொடுத்த இயக்கம். ‘மிசா’ சிறைக் கொட்டடியில் தியாகத் தழும்புகளை ஏந்திய தீரர்களாம் தொண்டர்களைக் கொண்ட மக்கள் இயக்கம்.

இன்றைக்கு மத்திய பாஜக அரசில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி போன்ற நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இந்தியாவின் பன்முகத்தன்மை சிதைக்கப்படுகிறது. அவரவர் தாய்மொழி மீது ஆதிக்க மொழியைத் திணிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சமூகநீதிக் கொள்கையைத் தகர்த்திடத் திட்டமிடப்படுகிறது. ஜனநாயகத்திற்காகக் குரல் கொடுக்கும் அரசியல் தலைவர்கள் வீட்டுச்சிறையில் அடைக்கப்படுகிறார்கள். சமூக செயற்பாட்டாளர்கள், கருத்துரிமை போற்றும் சிந்தனையாளர்கள் எழுத்தாளர்கள் மீது கொடூரச் சட்டங்களின் கீழ் வழக்குகள் போடப்பட்டுச் சிறைப்படுத்தப்படுகிறார்கள்.

இதுகுறித்து கேள்விகளை எழுப்புவது ஜனநாயகத்தின் ஓர் அடிப்படைக் கடமை. மக்களவையின் மூன்றாவது பெரிய கட்சி என இந்திய மக்களால் அங்கீகரிக்கப்பட்ட திமுகவிற்குகு அந்த உரிமை நிரம்பவே இருக்கிறது. உண்மைகளை உரக்கச் சொல்லி, உரிமைகளை வலியுறுத்தினால் அவர்களை ‘ஆன்ட்டி இந்தியன்’ என்றும் ‘தேசவிரோதிகள்’ என்றும் முத்திரை குத்தும் மலிவான போக்கை பாஜக வின் சில தலைவர்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்கள். அதன் தேசியத் தலைவர் நட்டாவும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதை, தன் வாயால் நிரூபித்திருக்கிறார்.

விமான நிலையத்தில் இந்தியில் பேச வலியுறுத்துவது அரசின் யோகா பயிற்சி குறித்த கூட்டத்தில், இந்தி தெரியாதவர்கள் வெளியேறுங்கள் என விரட்டுவது இருமொழிக் கொள்கையைச் சட்டமாக்கி நிலைநிறுத்தியிருக்கும் நிலையில் இந்தி, சமஸ்கிருத மொழிகளைத் திணிப்பது என தமிழ்நாட்டின் நீண்ட நெடிய பண்பாட்டுக்கு எதிராகச் செயல்படும் கட்சியாக பாஜக இருக்கிறது.

இதுகுறித்து கேள்வியெழுப்பினால், திமுக-வை வளர்ச்சிக்கு எதிரான கட்சி என்றும், நாட்டு நலனுக்கு எதிராகத் தூண்டிவிடுகிற கட்சி என்றும் குற்றம்சாட்டுவதென்பது பாஜக தலைமையின் இயலாமையையே காட்டுகிறது. மக்களவையில் பெரும்பான்மை பலம் இருக்கிறது என்பதற்காக, ஜனநாயகத்திற்கு விரோதமாக அரசியலமைப்புச் சட்டம் சுட்டிக்காட்டும் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிராக மதவாதத்தையும் மொழி ஆதிக்கத்தையும் முன்வைத்து நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கின்ற நாட்டின் வளர்ச்சிக்குக் கேடு விளைவிக்கின்ற கட்சியாக பாஜக தான் இருக்கிறது.

ஆள்பிடிக்கும் அரசியலைத் தமிழ்நாட்டிலும் நடத்த முயற்சிக்கும் பாஜக, தமிழ்நாட்டின் பண்பாட்டிற்கும், இந்திய தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கும், ஜனநாயக மாண்புகளுக்கும் நாட்டின் அரசியல் சட்டத்திற்கும் ஒரே எதிரியாகத் திகழ்கிறது என்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:பாடகர் எஸ்பிபியின் உடல் நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை

ABOUT THE AUTHOR

...view details